
தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். உலகில் தமிழர் வசிக்கும் நாடுகளிலெல்லாம் அவருக்கு ரசிகர்கள் உண்டு. ஜப்பான், கொரியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்களிலும் ரஜினி ரசிகர்கள் உள்ளனர்.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கிவிட்டனர். அவரைப் பற்றி மாற்றி மாற்றி வரும் செய்திகள் மற்றும் வதந்திகள் காரணமாக ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ரஜினி குறித்த வதந்தியால் கலக்கமடைந்த ரசிகர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்துக்கோட்டை அருகே பால்ரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி வெங்கடேசன் (29). அந்த பகுதி ரஜினிமன்ற கிளை செயலாளராக இருந்தார். ரஜினி உடல்நிலை பற்றி வந்த வதந்தியால் வேதனையில் இருந்தார்.
இந்நிலையில், நண்பர் ராஜேசுக்கு நேற்று மாலை செல்போனில் பேசிய வெங்கடேசன், “தலைவர் ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் என்னால் தாங்கமுடியாது. எனவே, சாகப்போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
அதற்கு நண்பர், “கவலைப்படாதே, தலைவர் ரஜினி உடல் நலம் தேறி வந்துவிடுவார்” என்று ஆறுதல் கூறியிருக்கிறார். இதன்பிறகு அவரது செல்போனுக்கு நண்பர் பேசியபோது செயல்படவில்லை.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் வெங்கடேசன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.