Wednesday, May 25, 2011
கடந்த ஒருவாரமாகவே ராணா கைவிடப்படுமா என்ற கேள்விக் குறியோடு செய்தி வெளியிட்டு கே.எஸ்.ரவிகுமாரை டென்ஷன் ஆக்கி வருகின்றனர் செய்தியாளர்கள். முன்னணி நாளிதழ் ஒன்றிலும் இப்படி செய்தி வெளியானது. அவசரம் அவசரமாக அந்த நாளிதழ் நிர்வாகத்தை தொடர்பு கொண்ட சவுந்தர்யா ரஜினி, ஏன் இப்படியெல்லாம் செய்தி போடுறீங்க என்று கடிந்து கொண்டாராம்.
நாலு வரி செய்தியாக இருந்தாலும், அது பல்வேறு பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துவதால்தான் இப்படி உடனடி ரீயாக்ஷன் அவரிடமிருந்து.
தமிழ்சினிமாவில் ஒரே ஒரு படத்திற்கு கூட 100 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு Ranaசெய்யலாம். அதை திரும்பவும் சேதாரமில்லாமல் எடுக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்த முதல் ஹீரோ ரஜினிதான். இந்த நிலையில் அவருக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதை வெவ்வேறு விதங்களில் அலசி பார்த்தாக வேண்டிய கடமை இருக்கிறது நிருபர்களுக்கு. இப்படி செய்தி வெளியிட்டாக வேண்டிய சூழ்நிலையும் அதனால்தான் அமைகிறது.
இருந்தாலும் ராணா கைவிடப்படவில்லை என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். மும்பையிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இதையே கூறியிருக்கிறார் அவர். அது பின்வருமாறு
ரஜினி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராணா படம் கைவிடப்பட்டிருப்பதாக வெளியாகிற தகவல்கள் வருத்தம் அளிக்கிறது. உடல் நலக்குறைவால் ஒருவர் பாதிக்கப்படுவது இயற்கை. சூப்பர் ஸ்டார் ரஜினியின் கனவுப்படம் ராணா. அவரது சிந்தனையில் உதித்த படம். எனவே இந்தப்படத்தை வெற்றிகரமாக கொண்டு வருவதில் அவர் மிகுந்த ஆர்வமாக உள்ளார்.
ரஜினியின் உடல் நலக்குறைவு, இந்தப்படத்தின் படப்பிடிப்பு திட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு சிறிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அவர் உடல் நலம்பெற்று வருவதில் உறுதியாக உள்ளார். மேலும் ஜுலை மாதத்துக்கு பிறகுதான் தீபிகா கால்ஷீட் தந்துள்ளார்.
எனவே இந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக வருகிற தகவல்கள் தவறானவை. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான். சூப்பர் ஸ்டார் வேகமாக உடல் நலம்பெற்று வருகிறார். அடுத்த ஆண்டு ராணா படத்தை வெளியிட்டு விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.