நடிகர் விஜய்க்கு இன்று 37வது பிறந்த நாள். ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஏழை மக்களுக்கு உதவிகள், மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு, பாடப்புத்தகங்கள் என வழங்கி தனது வருமானத்தில் சிறு பகுதியை சமூக சேவைக்காக பயன்படுத்தி வரும் விஜய், இன்று தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடுகிறார். அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் வந்து விட்டதாலோ என்னவோ... இந்த ஆண்டு சற்றே பக்குவமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், எனது பிறந்தநாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் சென்னையில், என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண்தானம் செய்தால் மகிழ்ச்சி அடைவேன். இதேபோல் ரத்ததானம் செய்வதுடன், ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏழை மாணவர்-மாணவிகளுக்கு உதவுதல், ஏழைப்பெண்களுக்கு உதவுதல் போன்ற சமூக நலப்பணிகளை செய்து மக்கள் இயக்கத்தை வலுவடைய செய்ய வேண்டும், என்று தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நல்ல விஷயத்தை யார் செய்தாலும் ஆதரிக்க வேண்டும். விஜய் தனது பிறந்த நாளில் செய்யும் நற்செயல்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். விஜய்க்கு வாழ்த்து சொல்ல விரும்பும் வாசகர்கள் இங்கே தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்யலாம்.