நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு சினிமாவில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். விக்ரம் பிரபு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பிலிம் அகடமியில், திரைப்பட தொழில்நுட்பம் படித்தவர். இவரை சினிமாவில் நடிக்கவைப்பதற்கு பல பட நிறுவனங்கள் முன்வந்தன. தகுந்த சந்தர்ப்பத்துக்காக விக்ரம் பிரபு காத்திருந்தார். டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், விக்ரம் பிரபு நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்தை மைனா புகழ் பிரபு சாலமன் இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
சிவாஜி குடும்ப வாரிசை வைத்து படம் இயக்குவது குறித்து டைரக்ர் பிரபுசாலமன் அளித்துள்ள பேட்டியில், சமீபகாலமாக, காட்டு யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு காரணம் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை. ஊருக்குள் வந்து துவம்சம் செய்கிற யானைகளை விரட்ட, வளர்ப்பு யானைகள் பயன் படுத்தப்படுகின்றன. இதற்கு கும்கி யானைகள் என்று பெயர். அந்த கும்கி யானைகள் பற்றியும் கதையில் சொல்லப்படுகிறது. கதைப்படி, படத்தின் கதாநாயகன், கும்கி யானையின் பயிற்சியாளர். அந்த கதாபாத்திரத்துக்கான நாயகனை தேடி 6 மாதங்களாக பல ஊர்களில் அலைந்தேன். விக்ரம் பிரபுவை சமீபத்தில்தான் பார்த்தேன். என் கதைக்கும், நான் கற்பனை செய்திருந்த கதாபாத்திரத்துக்கும் அவர் நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருந்தார். அவரை, யானைகளுடன் பழக விடுவதற்காக, கேரள மாநிலம் ஒத்தப் பாளையத்துக்கு அனுப்ப இருக்கிறேன். 15 நாட்கள் யானைகளுடன் அவர் பழகியபின், படப்பிடிப்பு தொடங்கும், என்று கூறியுள்ளார்.