
கடந்த ஆண்டைப் போன்ற சோதனையை முன்னெப்போதும் சந்தித்திருக்காது இஃபா எனப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழா. காரணம் இந்த விழாவை இனப்படுகொலை அரங்கேறிய இலங்கையின் கொழும்பு நகரில் நடத்தியதுதான்.
ஐஃபாவின் இந்த விழாவில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்களுக்கு அழைப்பிதழ் வைக்க இலங்கை தூதர் முனைந்தபோது, அந்த அழைப்பை முதல் நபராக நிராகரித்தவர் ரஜினி.
அதன்பிறகுதான் இந்த விவகாரம் சூடுபிடித்தது. அனைத்து நடிகர் நடிகைகளும் நிராகரித்தனர். பெரும் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்ய விழாக்குழுவினர் அழைத்தபோது நடிகை நமீதா கூட மறுத்துவிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு தூதராக இருந்த அமிதாப் பச்சன், சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்க இருந்த ஷாரூக்கான், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்றவர்களும், தமிழுணர்வாளர்களின் கோரிக்கைக்கு இணங்கி புறக்கணித்தனர்.
இதன் விளைவு கடந்த ஆண்டு இஃபா விழா படுதோல்வியைச் சந்தித்தது. பெரும் நஷ்டம் அடைந்தனர் விழாவை நடத்தியவர்கள்.
இந்த ஆண்டு கனடாவின் டொரண்டோ நகரில் நடக்கிறது இஃபா விழா. நாளை வியாழக்கிழமை இந்த விழா தொடங்குகிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த திரைப்பட விழா நடக்கிறது. எந்தத் தடையும் எதிர்ப்பும் இல்லாததால், இந்த முறை விழாவில் பங்கேற்க பாலிவுட் நட்சத்திரங்கள் குவிய ஆரம்பித்துள்ளனர்.
ஷாரூக்கான் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு நடனம் ஆடுகிறார். கங்கனா ரணவத், அனுஷ்கா சர்மா, மாதவன், சுக்விந்தர் சிங், முன்னாள் கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் என ஒரு பட்டாளமே நேற்று கனடா கிளம்பியது.