Wednesday, June 08, 2011
போஸ்டர் ஒட்டுற செலவை கூட படம் கலெக்ட் பண்ணலையே என்று பல தயாரிப்பாளர்கள் புலம்புகிற அளவுக்குதான் இருக்கிறது தியேட்டர் கலெக்ஷன் நிலைமை. தனியாக உட்கார அஞ்சுகிறவர்களுக்கு 'டிக்கெட்டுடன் முடிகயிறு இலவசம்' என்று அறிவிக்கிற நிலைமை வந்தாலும் ஆச்சர்யமில்லை. அந்தளவுக்கு சில தியேட்டர்களில் 'சிங்கிள் பார்ட்டி' ஷோவெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறது.
எப்.எம்.எஸ் மற்றும் சேட்டிலைட் உரிமை இவ்விரண்டும்தான் தயாரிப்பாளர்கள் போட்ட பணத்தை கணிசமாக திரும்ப கொடுப்பவை! அதிலும் சேட்டிலைட் பிசினஸ்தான் இன்றைக்கு மிக முக்கியமான வசூல் கேந்திரமாக இருப்பதால், பலருக்கும் அதன்மீது ஒரு கண்!
சன், கலைஞர் இந்த டிவிக்களை தவிர விஜய், பாலிமர் போன்ற டிவிகளும் சேட்டிலைட் உரிமைகளை பெற்று வருகின்றன. பெரிய நடிகர்களின் படங்களை எப்பவாவது வாங்கும் ராஜ் விளம்பரங்களையே ஒரு நிகழ்ச்சியாக்கி விடுகிறது. நடுநடுவே சுமார் ரெண்டு நாட்களுக்கு படத்தை தொடர்ச்சியாக ஓட்டுவதால் ஆயாசமடைகிற ரசிகன், நீங்க வாங்காம இருக்கறதே நல்லது என்று வாசகர் கடிதம் எழுதுகிற அளவுக்கு இருக்கிறது சோக நிலை!
ஜெயா டி.வி முன்பு போல அடித்து பிடித்துக் கொண்டு வாங்குவதில்லை. ஒருவேளை அம்மா உத்தரவுக்காக காத்திருக்கிறார்களோ என்னவோ? சன் டிவிக்கு விற்றால் மற்ற டி.விக்கள் அப்படத்தின் ட்ரெய்லரையோ க்ளிப்பிங்ஸ்களையோ ஒளிபரப்புவதில்லை. மற்ற டி.விகளுக்கு விற்றால் சன் அவற்றை கண்டு கொள்வதே இல்லை.
இந்த வியாபார போட்டியில் சட்டை காலர் கிழிந்து நையப்புடைக்கப்படுகிறது ஒவ்வொரு படங்களும். இதையெல்லாம் தவிர்க்கும் விதத்தில் ஒரு ஐடியா செய்யலாமே என்று கூடி பேசியிருக்கிறார்கள் நடிகர் சங்கத்தின் இந்நாள் தலைவர் சரத்குமாரும், முன்னாள் தலைவர் விஜயகாந்த்தும்.
அதன்படி நடிகர் சங்கமே ஒரு புதிய சேனலை துவங்குமாம். எல்லா படங்களையும் ஒரு ரேட் போட்டு வாங்கிக் கொள்ளும். அல்லது பணம் கொடுக்காமல் வாங்கி ஒளிபரப்பும். வருகிற விளம்பர வருவாயில் பர்சன்டேஜ். திட்டம் அமர்க்களமாயிருக்கே என்று கைகொடுக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.
எல்லாம் சரி. ஈகோ இல்லாமல் நிறைவேற்றணுமே!