Thursday, June 09, 2011
தமிழினப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்றும், இலங்கை அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத் தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. சிங்கள, பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு கண்ணியமிக்க, சம உரிமையுடைய வாழ்வைப் பெறுவதற்காக கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக போராடி வரும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒரு திருப்பு முனையாகும். இத்தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும், தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் நாம் தமிழர் கட்சி இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்த மூவர் குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைத் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத இலங்கை அரசிற்கும், அந்த அறிக்கையின் மீது ஆதரவு நிலையெடுக்காத இந்திய அரசிற்கும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானம், தமிழினத்தின் சார்பாக விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான, ராஜதந்திர ரீதியிலான நியாயமான அழுத்தமாகும். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, ஈழத் தமிழினத்திற்கு எதிரான இலங்கை அரசு இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு ஆதரவுடன் இரண்டரையாண்டுக் காலத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றுள்ளது. இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே அமைத்த கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையத்தின் (Lessons Learnt and Reconciliation Commission � LLRC) முன்னின்று ஈழத்தில் நடந்த மானுடப் பேரழிவு குறித்து தனது சாட்சியத்தை அளித்த மதிப்பிற்குரிய மன்னார் மாவட்டப் பேராயர் ராயப்பு ஜோசஃப் அவர்கள், இந்தப் போருக்கு முன் இருந்த வன்னி பகுதி மக்கள் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், போர் முடிந்த பிறகு வன்னி முள்வேலி முகாம்களுக்கு வந்து சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் குறைவாக உள்ளனர் என்றும், அவர்கள் கொல்லப்பட்டோ அல்லது காணாமல்போய் உள்ளவர்களாகவோ இருக்கலாம் என்றும் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார். உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த உண்மையை இன்று வரை இலங்கை அரசு மறுக்கவில்லை. ஆனால் இது குறித்து இலங்கை அரசிடம் இந்தியா எந்த கேள்வியும் கேட்கவில்லை. இது இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்கு இந்திய அரசு உடந்தையாக நின்றது என்பதற்கான மற்றொரு சான்றாகும். இந்திய அரசின் மெளனமே, இலங்கை அரசு திட்டமிட்டுச் செய்த மாபாதகச் செயலை இனப் படுகொலை என்று சர்வதேசம் கூற முன்வராததற்குக் காரணமாகும். எனவே தான், தமிழின அழிப்பு என்பது போர்க் குற்றம் என்ற அளவோடு நி்ற்கிறது. இந்த நிலையில் தான் தமிழினத்திற்கு எதிராக இலங்கை அரசு போர்க்குற்றம் செய்துள்ளது என்பது நம்பகமான குற்றச்சாற்று என்று ஐ.நா.நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்தது. அந்த அடிப்படையிலேயே, ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்கக்கோரி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனப் படுகொலைப் போர் முடிந்து வன்னி முகாம்களுக்கு வந்த சுமார் 3 லட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தப்படவில்லை. ஏனெனில் தமிழர்கள் வாழ்ந்த பூமியில் சிங்களர்கள் குடியேற்றம் நடைபெறுகிறது. அவர்களுடைய காணிகள் சிங்களர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களை நிரந்தரமாக ஒடுக்குவதற்கு, அவர்களின் பாரம்பரிய பூமியின் பெரும்பகுதியை இராணுவப் பகுதிகளாக (Cantonments) சிங்கள இனவெறி அரசு அறிவித்துள்ளது. வாழ்ந்த இல்லங்கள் போரினால் சிதைக்கப்பட்டு, வாழ்க்கைக்கு ஆதாரமான காணிகள் பறிக்கப்பட்டு, பிழைக்க வழியேதுமின்றி, ஈழத் தமிழினம் சிதறடிக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசை மண்டியிடச் செய்ய வேண்டுமெனில், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதே ஒரே வழியாகும். அந்த புரிந்துணர்வோடு தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது ராஜதந்திர ரீதியில் மிகச் சாமர்த்தியமான தீர்மானமாகும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்த தமிழ் மக்கள் எதை மிகவும் ஆவலாக எதிர்பார்த்தார்களோ அந்த விஷயத்தை முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சிகளின் பேராதரவோடு நிறைவேற்றியுள்ளார். இதற்காக தமிழினம் அவருக்கும், தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, இத் தீர்மானம் தமிழினம் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு ஒரு புத்துணர்வை தந்துள்ளது என்பதை நன்றியுடன் நாம் தமிழர் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, காணாமல் போன மீனவர்கள் 4 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்ததற்கும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறுகிறது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.