Saturday, July 02, 2011
மூன்று பேர்களிடமும் கதை கேட்கப்பட்டது உண்மைதான். ஆனாலும் இப்போது உடனடியாக விஜய் நடிக்கப்போவது சீமானின் இயக்கத்தில்தான்! என அடித்துச் சொல்கிறது விஜய் வட்டாரம்.
இதுகுறித்து சீமானிடம் பேசினோம்.
பகலவன் படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. சமூகம் சார்ந்த பங்களிப்பாக இந்தப் படம் விஜய்க்கு இருக்கும். முழுக் கதையையும் ரசித்துக் கேட்ட விஜய் சின்னச் சின்ன திருத்தங்களைச் சொன்னார். அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் குறித்த அந்த மாற்றங்களையும் அதிரடியாகச் செய்திருக்கிறோம். ஊழல், லஞ்சம், நில ஆக்கிரமிப்பு, மோசடித்தனங்கள், ஏழைகள் மீது பாராமுகம் என படத்தில் தீவிரமான அரசியலைக் கையில் எடுத்திருக்கிறோம். கதைக்குத் தக்கபடி பொறி பறக்கும் வசனங்களும் தயார். விஜய்யின் வார்த்தைகளில் இருந்து அவை வெளிப்படும்போது திரையில் மட்டும் அல்ல... ஒவ்வொரு ரசிகர்களின் உள்ளத்திலும் சமூகம் சார்ந்த அக்கறை தீயாகப் பிறக்கும்! என்கிறார் சீமான்.
படத்தில் விஜய்க்கு இரண்டு கெட்டப். முதலில் மருத்துவராக வரும் விஜய் அதன் பிறகு அதிரடியான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். ஹீரோயின் தேடும் படலம் தீவிரமாக நடக்கிறது. பாலிவுட் ஹீரோயின்களை இறக்குமதி செய்யலாம் என்பது விஜய்யின் யோசனை. படத்தில் கதாநாயகிக்கு வெயிட்டான கிராமத்துப் பாத்திரமாம். அதனால், பாலிவுட் நாயகிகளால் அதை சரிவர செய்ய முடியுமா என்பது சந்தேகம். பாவனா அந்தப் பாத்திரத்துக்கு பொருந்தக்கூடியவர் என்கிற ஆலோசனையும் நடக்கிறது.
இதற்கிடையில், விஜய்யின் அரசியலில் இறங்குவதற்கான அச்சாரமாக பகலவன் இருக்கும் என்கிற பரபரப்பும் றெக்கை கட்டுகிறது. உலகத் தமிழர்களின் ஆதரவையும், உள்ளூர் அரசியலையும் ஒருசேர ஈர்க்கும் விதமாகவே, விஜய் சீமான் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் சொல்கிறார்கள். இதற்காகவே படத்தில் பிரத்யேகமாக பட்டையைக் கிளப்பும் அதிரடி வசனங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறதாம்.