
இதனால் நாயகன், வில்லன் என்று பார்க்காமல் முன்னணி நடிகர்கள் சிலர் வில்லனாக நடிக்க முன்வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நூறு படங்களுக்கு மேல் நாயகனாக நடித்த சரத்குமார், தற்போது மறுபடியும் காஞ்சனா படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
வில்லன் என்றால் சாதாரண வில்லனாக அல்ல, திருநங்கையாக நடித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமாக காஞ்சனா என்ற தலைப்பில் திகில் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கும் கதை, திரைக்கதை அமைத்து ராகவா லாரன்ஸ் இயக்குகிறார்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதில் சரத்குமார் திருநங்கையாக அதே சமயம் படத்தின் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.
இதுவரை சரத்குமார் நடிக்காத இந்த வேடம் படத்தின் சிறப்பு அம்சங்களின் ஒன்றாகும். கிட்டதட்ட சந்திரமுகியில் ரஜினி செய்த லக..லக...லக...வை போல, சரத்குமாரும் இந்த படத்தில் ஏகப்பட்ட ரகளை செய்திருக்கிறார்.
சரத்குமாரின் இந்த வித்தியாசமான வேடம், புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது. ஜுலை மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்தை இந்தி நடிகர் சல்மான்கான் சமீபத்தில் பார்த்தாராம். படத்தை பார்த்தவர், இந்தியில் இந்த படத்தை எடுக்கலாம். அதில் நானே நடிக்கிறேன் என்று ராகவா லாரன்ஸிடம் கூறியிருக்கிறாராம்.