வாழ்க்கையில் எவ்வளவு போராட்டாம் வந்தாலும் சரி, அனைத்தையும் தகர்த்தெரிந்து மீண்டும் முன்னுக்கு வருவேன் என்று காமெடி நடிகை கோவை சரளா அதிரடியாக கூறியுள்ளார். கோவையில் சரளா குமரியாக பிறந்து, ரசிகர்களிடையே கோவை சரளாவாக "முந்தானை முடிச்சு" படம் மூலம் அறிமுகமானவர். நடிகைகள் மனோரமா, சச்சுவிற்கு பிறகு காமெடி இடத்தை பிடித்துக் கொண்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
காமெடியனாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு "சதிலீலாவதி" படத்தில், கமலுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்தபடத்தின் மூலம் நடிப்பின் உச்சத்துக்கே சென்ற கோவை சரளா தொடர்ந்து நடித்து வந்தார். பின்னர் தமிழ் சினிமாவை விட்டே சிலகாலம் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் ராகவா லாரன்ஸின், "காஞ்சனா" படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் கோவை சரளாவுக்கு இந்தபடம் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.
இதுகுறித்து கோவை சரளாவிடம் கேட்டபோது, நான் எத்தனையோ கேரக்டரில, எத்தனையோ நடிகர்களுடன் நடித்துவிட்டேன். சினிமாவைவிட்டே என்னை ஓரம் கட்ட நினைத்தவர்கள் இருக்கிறார்கள். காமெடியில் எனக்கு ஆதரவு தர மறுத்தார்கள், நான் வரக்கூடாது என்று நினைத்தார்கள். ஆனால் நான் இப்போது நடித்துக் கொண்டு இருக்கிறேன். காஞ்சனா படம், எனக்கு நிறைய பேர் வாங்கி கொடுத்திருக்கு, நிறைய போன் கால்ஸ்ம் வந்துக்கிட்டே இருக்கு. இந்த வெற்றி எனக்கு சந்தோஷமா இருக்கு, வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சந்தித்து விட்டேன். எவ்வளவு கஷ்டங்கள், போராட்டங்கள் வந்தாலும் அது அனைத்தையும் தகர்ந்தெரிந்து மீண்டும் வருவேன். பெண்கள் நிறைய பேர் காமெடிக்கு வரணும். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து ரசிகர்களாகிய உங்க மனசிலே இருப்பேன் என்றார்.