Friday, 22 July 2011
படமாகும் நடிகைகள் வாழ்க்கை கதை.....
Friday, July 22, 2011
நடிகைகளின் நிஜ வாழ்க்கையை படமாக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை மலையாளத்தில் ஏற்கனவே திரைக்கதை என்ற பெயரில் தயாரானது. ரஞ்சித் இயக்கினார். “ஓகோ” என்று வாழ்ந்த அவர் கடைசி காலத்தில் நோய்வாய்ப்பட்டு கவனிக்க ஆள் இன்றி கஷ்டப்பட்டு இறந்தார்.
பல நடிகர்கள் அவரை ஏமாற்றினர். அவை படத்தில் காட்சி படுத்தப்பட்டு இருந்தது. ஸ்ரீவித்யா வேடத்தில் பிரியாமணி நடித்தார். அது போல் சில்க் ஸ்மிதா வாழ்க்கை “தர்டி பிக்சர்ஸ்” என்ற பெயரில் படமாகிறது. சில்க் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். ஐதராபாத்தில் உள்ள சடிமாஜிராவ் பிலிம்சிட்டியில் இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது.
1980-களில் சில்க் ஸ்மிதா முன்னணி நடிகையாக இருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்தார். திரையில் ரசிகர்களை மகிழ்வித்த அவரது சொந்த வாழ்க்கை சோகம் நிறைந்ததாய் இருந்தது. காதலித்து பலர் ஏமாற்றினர். இறுதியில் வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
அவருடைய வாழ்க்கை அப்படியே படத்தில் கொண்டு வரப்படுகிறது. தேசிய விருது பெற்ற நடிகை சாரதாவின் வாழ்க்கை நயிகா என்ற பெயரில் மலையாளத்தில் படமாகி வருகிறது. சாரதா வேடத்தில் பத்மபிரியா நடிக்கிறார். ஜெயராஜ் இயக்குகிறார். சாரதாவின் காதல் தோல்விகள் இதில் காட்சிபடுத்தப்படுகின்றன.
நடிகை சோனாவும் தனது வாழ்க்கையை படமாக்கப் போவதாக அறிவித்து உள்ளார். சில்க்ஸ்மிதா வாழ்க்கை படமாவது போல் என் வாழ்க்கையையும் சினிமாவாக எடுப்பேன் என்று கூறினார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இப்படத்தை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
சோனியா அகர்வாலின் வாழ்க்கை ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற பெயரில் படமாகிறது. எல்லா நடிகைகளின் நிஜ வாழ்க்கையையும் இப்படத்தின் கதை தொட்டுச் செல்லும் என்று அவர் கூறினார்.
ராஜ்கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார்.