பிரபல பாலிவுட் நடிகையான மனிஷா கொய்ராலாவிற்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. படப்பிடிப்பின்போது இடைவேளை கிடைத்தால் போதும், சிகரெட் பிடிக்க ஆரம்பித்து விடுவார். தற்போது அவர் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் நடிகை வித்யா பாலன். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு ஹிந்தியில் டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் சில்க் ஸ்மிதாவாக வித்யா பாலன் நடிக்கிறார். ஏக்தா கபூர் தயாரிப்பில், மிலன் லுத்தாரியா இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இப்படத்தில் சிகரெட் பழக்கத்துக்கு அடிமையானவராக வித்யா பாலன் நடிக்கிறார். இதற்காக தினமும் ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதித் தள்ளுகிறாராம். இது குறித்து வித்யாவிடம் கேட்டதற்கு, "இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளில் ரொம்பவும் கிளாமராக நடிக்கும்படி கேட்டார்கள். மறுத்துவிட்டேன். ஆனால் சிகரெட் பிடிக்க வேண்டும் என கூறியபோது மறுக்க முடியவில்லை. இது படத்துக்காக செய்வதுதான். ஆனால் எனது வீட்டில் இருப்பவர்கள், அய்யோ... நீ சிகரெட் பிடிக்கிறியா? என சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை சமாதானப்படுத்துவதற்குள் ஒரு வழியாகிவிட்டேன்," என்றார்.