காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்டியதையடுத்து, தனது நீண்டகால காதலரும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்ய இருக்கிறார் நடிகை ஜெனிலியா. "பாய்ஸ்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். இந்தியில் "துங்கே மேரி கஸம்" என்ற படத்தில் நடித்தபோது, நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். ரித்தேஷ், மகாராஷ்டிரா மாஜி முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார்.
இந்நிலையில் இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ரிதேஷின் தந்தை இவர்கள் காதலை பிரிக்க பல்வேறு முயற்சி செய்தார். ஆனாலும், இவர்கள் தங்களது காதலில் உறுதியாக இருந்தனர். அவ்வப்போது இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தனர். எனவே எதிர்ப்பை கைவிட்டு, சேர்த்து வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் விளைவு இத்தனை நாட்கள் ரகசியமாக சந்தித்து வந்த காதலர்கள் இப்போது பெற்றோர் அனுமதியுடன் பகிரங்கமாக ஜோடியாக சுற்றுகின்றனர். சமீபத்தில் டொரண்டாவில் நடந்த ஃபிபா விழாவில் ஜெனிலியாவும், ரித்தேஷூம் ஒன்றாக ஜோடி போட்டு விழாவிற்கு வந்தனர். ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் கைகோர்த்தபடி நடந்து சென்று தங்களது காதலை உறுதிபடுத்தினர். அருகருகே உட்கார்ந்து விழாவை கண்டு களித்தனர். கூடவே ஜெனிலியாவின் தாயாரும் உடன் இருந்தார்.தற்போது ஜெனிலியா இந்தியில் இரண்டு படங்களிலும், இதுதவிர தமிழ் உட்பட மற்ற மொழிகளில் சில படங்களிலும் நடித்து வருகிறார். இதையெல்லாம் முடித்த பின்னர் ரித்தேஷை, திருமணம் செய்வார் எனத் தெரிகிறது.