முக்கிய படங்கள் ரிலீசுக்காக அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்பதால் காஞ்சனா படம் முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனாலும் நடிகர் லாரன்ஸ் இப்படத்தை வரும் 22ம்தேதி ரிலீஸ் செய்ய முனைப்பு காட்டி வருகிறார். கடந்த 2007ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் முனி என்ற படத்தை இயக்கி வெளியிட்டார் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தின் இரண்டாவது பாகமாக முனி 2 எடுத்திருக்கும் லாரன்ஸ், படத்திற்கு காஞ்சனா என்று பெயரிட்டுள்ளார்.
லாரன்ஸே ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில், லட்சுமிராய், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் முக்கிய படங்கள் வரிசைகட்டி நின்றதால் ரிலீஸ் தாமதமாகி வருகிறது. இம்மாத தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் 15ம்தேதி என்று கூறப்பட்டது. இப்பாது 22ம்தேதி கஞ்சனா ரிலீஸ் ஆகவிருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஏன் இந்த இழுபறி என்று விசாரித்தால், அடுத்தடுத்து முக்கிய படங்கள் வரிசைகட்டி நிற்பதால்தான் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டு வருவது தெரியவருகிறது. வரும் 15ம்தேதி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் தெய்வத்திருமகள் படம் ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.