"கோ" படத்தின் மூலம் பிரபலமான அஜ்மலுக்கு, இந்தியில் உருவாகும் "கோ" படத்திலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது. "அஞ்சாதே", "டாக்சி", "திருதுரு துறுதுறு" உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் அஜ்மல். சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், வெளியாகி சூப்பர் ஹிட்டான "கோ" படத்தின் மூலம் பிரபலமானார். "கோ" படத்தில் சிறகுகள் கட்சியின் தலைவராக, வசந்த் என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் "கோ" படம் இந்தியிலும் உருவாக இருக்கிறது. இப்படத்தை நடிகர் அக்ஷய் குமார் இயக்குகிறார். "கோ" படத்தில் வசந்த் கேரக்டரில் நடித்த அஜ்மலையே, இந்தி "கோ" படத்திலும் நடிக்க வைக்க அக்ஷய் பிரியப்படுவதாகவும், இதற்காக அஜ்மலுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து பேச அஜ்மல், அடுத்த மாதம் மும்பை செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதுபற்றி பேச, அஜ்மல் வாய் திறக்க மறுக்கிறார். தற்போது தன்னை தேடி 20க்கும் மேற்பட்ட கதைகள் வந்ததாகவும், அதில் குறிப்பிட்ட 3 கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கப்போவதாகவும் கூறும் அஜ்மல், ஒவ்வொரு படத்திற்கும் வித்யாசம் தேவை என்றும், ஒரே மாதிரியான படங்களில் நடிக்க ஆர்வமில்லை என்றும் கூறுகிறார்.