Sunday, May 15, 2011
வடிவேலு பிரச்சாரம் காமெடியாகி விட்டது என்று நடிகர் சிங்கமுத்து பேசினார். காமெடி நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து மோதல் நீடிக்கிறது. ஏற்கனவே இருவரும் போலீசில் புகார் அளித்தனர். இதில் சிங்கமுத்து கைதானார். நடைபெற்ற தேர்தலில் வடிவேலு தி.மு.கவுக்கும், சிங்கமுத்து அ.தி.மு.கவுக்கும் பிரச்சாரம் செய்தனர். இது குறித்து சிங்கமுத்து கூறியதாவது,
தமிழக மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். தமிழகத்தை வலுவாக காப்பாற்ற ஜெயலலிதாவால் மட்டுமே முடியும் என்று கருதி அவர்கள் அ.தி.மு.க.விடம் ஆட்சியை கொடுத்துள்ளனர்.கடந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் ஊழல் மலிந்து கிடந்தது. சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்தினர். யாரையும் பிழைக்க விடவில்லை. மக்கள் வெறுத்துப் போயிருந்தனர். தேர்தலில் தங்கள் கோபத்தை காட்டி விட்டனர். ஜெயலலிதா தமிழகத்தை முதல் தர மாநிலமாக மாற்றுவார். நடிகர் வடிவேலு தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்டார். தி.மு.க.வுக்கு 200 இடம் கிடைக்கும் என்றார். அவரது பிரச்சாரம் காமெடியாக முடிந்து விட்டது. விஜயகாந்த் அடிப்பார் என்று பயந்துதான் தி.மு.க. பக்கம் ஓடினார். எம்.ஜி.ஆர் ரசிகன் என்று கூறிக் கொண்டு இரட்டை இலைக்கு ஓட்டு போடாதீர்கள் என்றார். விஜயகாந்தை மட்டும் வசை பாடினார். இவரது பிரச்சாரம் சிறுபிள்ளைத்தனமானது என்று வாக்காளர்கள் ஒதுக்கி விட்டனர். மக்கள் சரியான தீர்ப்பைத்தான் வழங்கியுள்ளனர் என்று கூறினார்.