Monday, May 09, 2011
நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவசர பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதாக கூறப்பட்டது.
ரஜினி தற்போது குணமடைந்து வருகிறார் என்று அவரது மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார். ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறினார்.
ரஜினி நலமடைய வேண்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனை செய்தனர். திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ரஜினி நலம் பெற ரசிகர்கள் அங்க பிரதட்சணம் செய்தனர்.
இணையதள ரசிகர்கள் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஒன்லி சூப்பர் ஸ்டார் சுந்தர், குட்டி சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரஜினி பெயர் மற்றும் நட்சத்திரத்துக்கு விசேஷ அர்ச்சனை செய்யப்பட்டது. ரசிகர்களின் கூட்டு பிரார்த்தனையும் நடந்தது.
எஸ்.எஸ்.ஆர்.கே. சிவா, ரோபோ சத்யா, ரகுவந்த், விஜய் ஆனந்த், ரஜினி மனோஜ், முத்து, கௌதம், கார்த்திக், சந்துரு, ராஜன், உதய், வேங்கடபதி, கனி, ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் திருவேற்காடு கோவிலின் பிரசாதம் ரஜினி வீட்டில் ஒப்படைக்கப்பட்டது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள ராகவேந்திரர் மடத்தில் திருச்சி மாவட்ட ரசிகர்கள் எஸ். கண்ணன் தலைமையில் வெள்ளித்தேர் இழுத்தனர். ராஜகோபுரம் முனீஸ்வரன் கோவிலில் இருந்து மங்கம்மா நகர் முருகன் கோவில் வரை ராயல்ராஜ் தலைமையில் ரசிகர்கள் தீச்சட்டி எடுத்தனர். தென்னூர் உதயா தலைமையில் பால் குடம் எடுக்கப்பட்டது.
விழுப்புரம் முரட்டாண்டியில் உள்ள 72 அடி உயர பிரத்தியங்கரா தேவி கோவிலில் சிறப்பு அர்ச்சனை நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரசிகர்கள் குடும்பத்துடன் தங்கத்தேர் இழுத்தனர்.