Sunday, May 01, 2011
கடும் எதிர்ப்பு காரணமாக விக்ரம் நடித்த தெய்வத்திருமகன் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
தெய்வத்திருமகன் என்ற படத்தில் விக்ரம் மனவளர்ச்சி குன்றியவராக நடித்துள்ளார். இந்த படத்தின் பெயருக்கு தேவர் அமைப்புகள் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.பசும்பொன் முத்துராமலிங்க தேவரை தெய்வத்திருமகன் என்று குறிப்பிட்டு வருகிறோம் எனவே படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
நேற்று திருவான்மியூரில் நடிகர் விக்ரமின் வீட்டை தேவர் இளைஞர் பேரவையினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் காரணமாக தெய்வத்திருமகன் படத்தின் பெயர் விக்ரமின் தெய்வத்திருமகள் என மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தயாரிப்பாளர் மோகன் நடராஜன் தமது ராஜகாளியம்மன் மீடியாஸ் நிறுவனம் சார்பில் விக்ரம் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாக்கி வந்த தெய்வத்திருமகன் படத்தலைப்பு குறித்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.குறிப்பாக மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் நேரிலும், கடிதம் வாயிலாகவும் மற்ற அமைப்பினரும் தங்கள் கருத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.
அதில், தமிழக மக்கள் பசும் பொன் உ.முத்து ராமலிங்கதேவரை தெய்வத்திருமகன் என்று போற்றப்படுவதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி தலைப்பை மாற்றிக்கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
எனவே ஸ்ரீதர்வாண்டையார் மற்றும் அமைப்பினரின் நியாயமான உணர்வுகளை புரிந்து கொண்டு ராஜகாளியம்மன் மீடியாஸ் நிறுவன உரிமையாளர் மோகன் நடராஜன் குறிப்பிட்ட தெய்வத் திருமகன் படத்தலைப்பை விக்ரமின் தெய்வத்திருமகள் என்று மாற்றிக் கொள்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
எனவே இத்திரைப்படத்தின் படத்தலைப்பு விக்ரமின் தெய்வத்திருமகள் என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தயாரிப்பாளர் மோகன் நடராஜன் ஒப்புதலோடு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிடுகிறது.
இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.