Tuesday, June 07, 2011
தேர்தல் முடிந்து... ரிசல்ட்டும் வந்து... புதிய அரசு பொறுப்பேற்று மூன்று வாரங்கள் கடந்து விட்ட நிலையில், அத்தனை அரசியல் பரபரப்புகளும் அடங்கிக் கிடக்கின்றன. ஆனால் தேர்தல் நேரத்தில் திமுகவுக்கா சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்த வடிவேலுவுக்கும், தேமுதிகவினருக்கும் இடையேயான புகைச்சல் மட்டும் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவு வந்து அடுத்த சில நாட்கள் சென்னைக்கு செல்லாமல் வெளியூரிலேயே தங்கிய வடிவேலு இப்போது சென்னையில் தேமுதிக அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் தனது வீட்டில்தான் இருக்கிறார்.
தேர்தல் பிரசாரத்தின்போது தாறுமாறாக விஜயகாந்தை தாறுமாறாக விமர்சித்ததை வடிவேலு மறந்தாலும், தேமுதிகவினர் இன்னமும் மறக்கவில்லை என்பதற்கு தினம் தினம் வடிவேலு வீட்டு முன் கூடும் தேமுதிக தொண்டர்களே உதாரணம். வடிவேலு வீட்டுக்கு முன்பு திடீர் திடீரென கூடுவது, இருக்கிற கெட்ட வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தி திட்டுவது என்று பொழுதை கழித்து வருகிறார்களாம்.
தேர்தல் முடிவு பாதகமாக வந்தபோதே நொந்நு நூடுல்ஸ் ஆகி ஓடி ஒளியும் நிலைக்கு தள்ளப்பட்ட வடிவேலுவை, இன்னமும் இப்படி பேசி புண்படுத்துகிறார்களே என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் புலம்பும் அளவுக்கு தேமுதிகவினர் அநாகரிகமாக பேசி வருகிறார்களாம்.
இந்த தாக்குதலை சமாளிக்க வடிவேலு புதிய திட்டமொன்று தீட்டியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாகப்பட்டது, தேமுதிகவினரின் தாக்குதலை கட்சி ரீதியாக சமாளிக்க திட்டமிட்டிருக்கிறாராம். தற்போது வடிவேலு எந்த அரசியல் கட்சியிலும் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது. அப்படியிருக்கும்போது எப்படி கட்சி ரீதியாக சந்திப்பார்? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடியாக திமுகவில் சேர முடிவு செய்துள்ளாராம். அதேநேரம் புதிய படமொன்றிலும் வடிவேலு கவனம் செலுத்தி வருகிறாராம். அந்த படத்தில் 25 கேரக்டர்களில் நடிக்கவிருக்கும் வடிவேலு, புதிய படம் வெற்றிப்படமாக இருந்தால் இழந்த செல்வாக்கை மீண்டும் எளிதில் பெற்றுவிடலாம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.