
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு ஆரம்பித்த போதுதான் உடல் நலம் குன்றியது. படப்பிடிப்புக்கு வந்த தீபிகாபடுகோனே திரும்பி சென்றார். இப்போது ரஜினி பூரண குணம் அடைந்துள்ளதால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
அக்டோபரில் சூட்டிங்கை தொடங்க உள்ளனர். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட கப்பல் செட், மாட மாளிகை அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாயின.
இதுபற்றி கே.எஸ். ரவிக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
ரஜினி முழுக்க தயாரான பிறகே “ராணா” பட வேலைகள் துவங்கும். ராணா படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் கப்பல், மற்றும் மாளிகை அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன. அது போன்று அரங்குகள் எதுவும் அமைக்கப்படவில்லை. லொக்கேஷன்களும் இன்னும் பார்க்கவில்லை.
இப்போதைக்கு படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் பாடல் கம்போசிங் பணிகளில்தான் கவனம் செலுத்துகிறோம். ஏ.ஆர். ரகுமான் ஏற்கனவே பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை துவங்கி விட்டார். படப்பிடிப்பை அக்டோபரில் துவங்க திட்டமிட்டுள்ளோம். படப்பிடிப்பை ஆரம்பித்த பிறகு எந்த தங்குதடையும் இல்லாமல் தொடர்ந்து நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராணா படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளிடம் அக்டோபரில் இருந்து கால்ஷீட் ஒதுக்கி தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தீபிகா படுகோனே எப்போது அழைத்தாலும் ராணா படப்பிடிப்புக்கு வர தயாராக இருக்கிறேன் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளார். சூட்டிங் துவங்கும் முன் ரஜினி திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபட முடிவு செய்துள்ளார்.