Monday, July 04, 2011
டிவி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவரின் உடலை 300 துண்டுகளாக நாங்கள் வெட்டியதாக கூறப்படுவது தவறான தகவல். நான்கு துண்டுகளாகத்தான் வெட்டினோம் என்று கூறியுள்ளார் நடிகை மரியா சூசைராஜ்.
மைசூரைச் சேர்ந்தவர் நடிகை மரியா சூசைராஜ். இவரது காதலர் ஜெரோம். இவர் கடற்படையில் பணியாற்றி வந்தார். மும்பையில் பெரிய நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் வலம் வந்த மரியாவுக்கு, டிவி தொடர் தயாரிப்பாளர் நீரஜ் குரோவரின் பழக்கம் கிடைத்தது. தனது தொழில் முன்னேற்றத்துக்காக குரோவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார் மரியா. இது குரோவர், மரியாவின் பெட்ரூம் வரை வந்து போகும் அளவுக்கு நெருக்கமானது.
2008ம் ஆண்டு மே மாதம் ஒரு நாள் இரவில் மலட் பகுதியில் உள்ள மரியாவின் வீட்டுக்கு காதலர் ஜெரோம் வந்துள்ளார். அப்போது மரியாவும், குரோவரும் பெட்ரூமில் ஒன்றாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடும் வாக்குவாதம் மூண்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெரோம், குரோவரைக் கொலை செய்தார். இதைத் தடுக்க மரியா முன்வரவில்லை.
கொலை செய்த பின்னர் இருவரும் சேர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி, தானே அருகில் ஒரு காட்டுப் பகுதியில் போட்டு விட்டனர். இந்த வழக்கில் பின்னர் போலீஸார் இருவரையும் கைது செய்தனர். கடந்த 3 வருடங்களாக விசாரணை நடந்தது. இருவரும் சிறையில் இருந்தனர்.
விசாரணை இறுதியில் சமீபத்தில் தீர்ப்பளித்த கோர்ட், இருவர் மீதான திட்டமிட்ட கொலை என்ற குற்றச்சாட்டைக் கைவிட்டது. எதிர்பாராமால் ஏற்பட்ட ஆத்திரத்தால் நடந்த கொலை என்று கூறியது. இதையடுத்து ஜெரோமுக்கு 10 வருட சிறைத் தண்டனையும், மரியாவுக்கு 3 வருட சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மரியா ஏற்கனவே 3 ஆண்டு சிறையில் கழித்து விட்டதால் அவரை விடுவிக்கவும் உத்தரவிட்டார். அதன்படி மரியா விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான மரியா மாஹிம் பகுதியில் உள்ள செயின்ட் மைக்கேல் சர்ச்சுக்கு சென்று வழிபட்டார். பின்னர் மாஹிம் தர்கா மற்றும் சித்திவிநாயக் கோவிலுக்கும் செல்ல அவர் திட்டமிட்டார். ஆனால் மீடியாவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வந்ததால் தனது திட்டத்தை அவர் கைவிட்டார்.
அதன் பின்னர் மரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவருடன் அவரது வழக்கறிஞர் ஷெரீப் ஷேக்கும் உடன் இருந்தார். தெற்கு மும்பையில் உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார் மரியா. ஆனால் அங்கு குரோவரின் ஆதரவாளர்களும், நண்பர்களும் பெருமளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பை நாடினார் மரியா. போலீஸார் வந்து பாதுகாப்பு அளிக்கவே பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு தொடர்ந்தது.
செய்தியாளர்கள் குரோவர் கொலை தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு மரியா சுயமாகவும், தனது வக்கீலின் உதவியுடனும் பதிலளித்தார்.
மரியா பேசுகையில், குரோவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடும்பத்தில் ஒருவரை இழப்பது என்பது சாதாரணமானதல்ல. அந்த துயரத்தை நான் உணர்கிறேன். அந்த சம்பவமே பெரும் சோகமயமானது.
குரோவருடனான எனது உறவு குறித்து நான் விவரிக்க விரும்பவில்லை. அதேசமயம், ஜெரோமுடன் எனக்கு நெருக்கமான நட்பு இருந்ததில்லை என்பதை உறுதியாக சொல்ல விரும்புகிறேன். குரோவர் சம்பவத்திற்குப் பின்னர் நான் ஜெரோமுடன் பேசவே இல்லை. எங்களுக்குள் எந்த நட்பும் இல்லை.
(இப்படி இவர் கூறியபோது வெளியில் குழுமியிருந்த குரோவரின் நண்பர்கள் கொலைகாரி மரியா என்று கூறி கூச்சலிட்டனர். அப்போது ஒருவர் மரியாவை நோக்கி வேகமாக நகர்ந்தார். இதைப் பார்த்த பத்திரிக்கையாளர்களும், போலீஸாரும் அவரை அங்கிருந்து போகுமாறு கூறி அப்புறப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மரியா தொடர்ந்து பேசினார்.)
கடந்த மூன்று வருடமாக நான் சிறையில் இருந்தபோது அதிகமாக யாரையும் பார்க்கவில்லை. என்னால் சிறை வாழ்க்கையை இன்னும் கூட ஜீரணிக்க முடியவில்லை.
நான் ஒரு அப்பாவி என்பதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன். அதற்கு மேல் எதுவும் கூற விரும்பவில்லை. கடந்த காலத்தை நான் மறக்க விரும்புகிறேன். என்ன நடந்தது என்பதை இன்னும் கூட என்னால் உணர முடியவில்லை. நான் அனுபவித்த தண்டனையின் வலியிலிருந்து இன்னும் கூட என்னால் வெளிவர முடியவில்லை.
அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் இனி முடிவு செய்யப் போவதில்லை. அதை எனது குடும்பத்தினரிடமே விடப் போகிறேன். சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்த 3 ஆண்டு காலமும் நான் கடவுளிடம் மிகவும் நெருங்கியிருந்தேன். ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்ந்தேன். தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தேன். பெயின்டிங் போன்றவற்றில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன் என்றார் மரியா.
பேட்டியின்போது குரோவர் உடலை 300 துண்டுகளாக வெட்டியது எப்படி என்று செய்தியாளர்கள் கேட்டபோது அப்படியெல்லாம் செய்யவில்லை. நான்கு துண்டுகளாகத்தான் வெட்டினோம் என்றார் மரியா.
மரியாவின் வழக்கறிஞர் ஷெரீப் அப்போது குறுக்கிட்டு, மரியாவும், ஜெரோமும் குரோவர் உடலை 300 துண்டுகளாக வெட்டியதாக அரசுத் தரப்பு கூறியிருந்தது. ஆனால் புலனாய்வு அதிகாரி சதீஷ் ராவ்ரானே எடுத்த புகைப்படத்தின்படி, குரோவர் உடலில் இடுப்புப் பகுதி, தலை, கால்கள் போன்றவை உரிய இடத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. எனவே 300 துண்டுகளாக வெட்டப்பட்டதாக அரசுத் தரப்பு கூறியது சரியில்ல என்பது நிரூபணமானது என்றார் அவர்.