Monday, May 23, 2011
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற மகதீரா படம், தமிழில் மாவீரனாக வருகிறது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட இருந்தநிலையில் படத்தின் போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெயர் இடம்பெறவில்லை. இதனால் உதயநிதி இப்படத்தை வெளியிட மாட்டார் எனத் தெரிகிறது.
சிரஞ்சீவி மகன், ராம் சரண் தேஜா நடிப்பில், கடந்த 2009ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மகதீரா, படத்தை தமிழில் இப்போது ரிலீஸ் செய்கின்றனர். இப்படத்தை முதலில் கலைப்புலி தாணு தான் வாங்கி, கே.பாக்யராஜை வைத்து வசனம் எல்லாம் எழுத வைத்து டப் செய்தார். இடையில் இப்படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின், தானே இப்படத்தை வெளியிடுவதாக கூறி நல்ல விலைக்கு வாங்கினார். கூடவே படத்தின் ஆடியோ விழாவை, கமலை வைத்து பிரமாண்டமான முறையில் வெளியிட்டார் உதயநிதி. படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வந்த நிலையில் தேர்தல் முடிவுகளால் இப்படம் தள்ளிபோனது.
தேர்தல் முடிவுகள் வந்ததையடுத்து படத்தை இந்தவாரம் ரிலீஸ் செய்ய மும்முரமான வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இப்போது படத்திற்கான விளம்பர போஸ்டர்கள் அனைத்திலும் ரெட் ஜெயன்ட் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கீதா ஆர்ட்ஸ், அல்லு அரவிந்த் வழங்கும் மாவீரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.