Thursday, May 12, 2011
மதுரை பக்கம் உள்ள கிராமம் தான் கதைக்களம். ஊரே போற்றி துதிக்கும் அழகர்சாமியின் குதிரை, திருவிழா சமயத்தில் களவு போகிறது.மலைகிராமத்தில் குதிரையை நம்பி, பிழைப்பை ஓட்டும் அப்புக்குட்டியின் குதிரையும் காணாமல் போகிறது.காவல் நிலையத்தில் காணாமல் போன குதிரைகள் பற்றி புகார் பதிவாகிறது. இரண்டு குதிரைகளும் கிடைக்கும் வரையில் கிராமத்து அசட்டு நம்பிக்கையின் மேல் ஏறி கதையும் கலகலப்பாக பயணமாகிறது. கிராமத்து வெள்ளந்தி ஜனங்கள் குறி சொல்லி கோடங்கி, கபட சாமியாடியை நம்பி மொக்கசாமி களாகிறார்கள். அத்தனையும் கொமடி துளிகள்.
காவல் அதிகாரியின் அருள் தாசின் விசாரணையில் கிராம பெருசுகள் ஒவ்வொரு விடயத்தை சொல்வது கதைக்கு சுவாரஸ்யம் தருகிறது. வழக்கம் போல், ஊர் தலைவரின் மகன் பிரபாகரன், வேறு ஜாதி பெண்ணான அத்வைதாவை வெறித்து பார்த்து காதலிக்கிறார். அப்புக்குட்டி - சரண்யா இருவரின் நேசம் மலை பிரதேசத்து காட்டு பூவாய் மணக்கிறது. கிராமத்தை வேவு பார்க்க வரும் "பரோட்டா" சூரி, தடாலடி சாமியாடியாக மாறுவது செயற்கையான சித்தரிப்பு.இரவு நேரத்தில் பிரபாகரன் தன் நண்பர்களுடன் கிராமத்தை வலம் வரும் போது, கண்டு பிடிக்க முடியாத குற்றங்கள் அம்பலமாவது வேடிக்கையான காட்சி. இறுதிக்காட்சி நெருங்கும் போது, சாமி குதிரையை செய்த "பூ" ராமு பேசும் வசனம், படத்தின் ஒட்டு மொத்த கதையையும் ஒரு புள்ளியில் நிறுத்துகிறது.
"குதிக்கிற குதிக்கிற", "அடியே இவளே", "பூவக்கேளு" ஆகிய பாடல்களில் இளைய ராஜாவின் இசை இதமாக பேசியுள்ளது. பாஸ்கர் சக்தியின் வசனம் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. கொமர்சியல் பட பாணியிலிருந்து விலகி வேறு மாதிரி படத்தை கொடுத்த டைரக்டர் சுசீந்திரனை பாராட்டலாம்.நடிகர்கள்: அப்புக்குட்டி, பிரபாகரன், சூரி, அருள்தாஸ், அழகன் தமிழ்மணி, தேவராஜ், "பூ" ராமு, தவசி
நடிகைகள்: சரண்யா மோகன், அத்வைதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை இளையராஜா, ஒளிப்பதிவு தேனீ ஈஸ்வர், எடிட்டிங் மு.காசி விஸ்வநாதன், கலை ஜெயச்சந்திரன், எழுத்து பாஸ்கர் சக்தி, பாடல்கள் பிரான்சிஸ் கிருபா, சினேகன், யுக பாரதி, சண்டை பயிற்சி அனல் அரசு, தயாரிப்பு பி.மதன், பி.ஆர்., நிகில், இயக்கம் சுசீந்திரன்.