Friday, June 10, 2011
உலகெங்கிலும் தமிழ் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கனடா, நார்வே உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் தமிழ் திரைப்படங்கள் மட்டுமே பங்கு பெறும் திரைப்பட விழா நடக்கிறது.வரும் ஆகஸ்ட் 15 முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்கள் ரஷ்யாவில் உள்ள உக்ளிச் நகரில் நடைபெற இருக்கும் இந்த தமிழ் திரைப்பட விழாவில், ‘எந்திரன்’, ‘சிங்கம்’, ‘அங்காடிதெரு’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘களவாணி’, ‘மதராச பட்டினம்’, ‘மைனா’, ‘நந்தலாலா’, ‘பையா’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ உள்ளிட்ட 11 தமிழ் படங்கள் ரஷ்ய மொழியில் சப்-டைட்டில் போடப்பட்டு அங்குள்ள திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளன. இதில் ஏராளமான சினிமா கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தியாவுக்கான ரஷ்ய தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான அருண் பாண்டியனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
"தமிழ் திரைப்படங்கள் தயாரிக்க தேவையான படப்பிடிப்பு இடங்களும், ஸ்டுடியோக்களும் ரஷ்யாவில் நிறைய உள்ளன. படப்பிடிப்பு தளங்களுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது, தங்கும் விடுதிகளில் 40 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.
இந்த வசதியை தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் அனைத்து தமிழ் படங்களும் ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்ய ரஷ்ய கலாசார மையம் உதவியாக இருக்கும்," என்றார் அருண்பாண்டியன்.