இலங்கையில் தமிழ் சமூத்தையே அழித்த பெருமை திமுக ஆட்சியாளர்களுக்கு உண்டு என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையில், இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இதன் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினர். தேமுதிக தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் பேசியதாவது: முந்தைய ஆட்சியில் இதே பிரச்னையை நான் பேசியிருக்கிறேன். அப்போது அவசரமாக ஒரு உண்ணாவிரதம், குடும்ப உண்ணாவிரதம் நடத்தினார்கள். போர் நின்றுவிட்டது என்று கூறினார்கள். மறுநாள் மழை விட்டாலும், தூவானம் விடவில்லை என்றார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவையும் அனுப்பிப் பார்த்தார்கள். சில பகுதிகளில் சில லட்சம் தமிழர்கள் மொத்தமாகக் காணாமல் போயிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எப்படியோ, தமிழ் சமூகத்தை அங்கு அழித்த பெருமை முந்தைய ஆட்சியாளர்களைச் சேரும். 1972-ல் இருந்து வஞ்சிக்கப்பட்டது தமிழகம்தான். காவிரிப் பிரச்னை உள்ளிட்ட பிரச்சினைகளால் திமுக ஆட்சியால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்றார் விஜயகாந்த். திமுகதிமுக சார்பில் துரைமுருகன் பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்னையில் யார் என்ன செய்தோம் என்று பேசுவதற்கான நேரம் இதுவல்ல. இது தமிழ் மக்களின் ஏகோபித்த தீர்மானமாக இருக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை தேவையானது. எத்தகைய தடை விதித்தாலும், தூதரக உறவைத் துண்டித்தாலும் உலக மக்கள் அதை வரவேற்பார்கள். மனமாச்சரியம் இன்றி இதை வரவேற்கிறோம் என்றார். சிபிஎம்சிபிஎம் தலைவர் செளந்தரராஜன் பேசுகையில், கடிதங்கள் எழுதிவிட்டு பிரச்னையை கை கழுவிவிடாமல், பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானம் கொண்டு வந்திருப்பதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இருந்தாலும் பொருளாதாரத் தடையால் தமிழர்கள் உள்ளிட்ட அப்பாவிகள், பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவர். எனவே பொருளாதாரத் தடை என்பதை மாற்றிக் கொள்வது பற்றி யோசிக்கலாம் என்றார். சிபிஐசிபிஐ உறுப்பினர் நஞ்சப்பன் பேசுகையில், இலங்கையில் நடந்தது இன அழிப்பு. இதை முன்னின்று நடத்தியது இந்திய அரசு. இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் இதில் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுத்திருந்தனர். ஆனால் இப்போதைய அரசின் நிலை தடம்புரண்டுவிட்டது. இலங்கைக்கு ராணுவ உதவி அளிக்கும் முயற்சிகளை திமுக அரசும் தடுக்கவில்லை. ராஜபக்சே மீது ஐ.நா. அறிக்கை குற்றம்சாட்டிய பிறகும் இந்திய அரசு மெளனம் காக்கிறது. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மிக கடமை இந்தியாவுக்கு இருக்கிறது. உலக அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமையைக் காப்போம் என உறுதி ஏற்றுள்ள அரசு அதை மீறினால், அடுத்த தேர்தலிலும் பலனை அனுபவிப்பார்கள் என்றார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர்க கோபிநாத் இதை ஆட்சேபித்தார். இதை எதிர்த்து சிபிஐ தலைவர் குணசேகரன் பேசுகையில், இலங்கையில் போரைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் மத்திய அரசு எடுக்கவில்லை. சர்வதேச அளவில் இலங்கைக்கு ஆதரவு திரட்ட இந்தியா தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அதனால்தான் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு துணை நிற்கும் அத்துணை இயக்கங்களும் தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் இயக்கங்கள் என்றார் அவர். காங்கிரஸ்காங்கிரஸ் சார்பில் ரங்கராஜன் பேசுகையில், இலங்கை தமிழர் நலனைக் காக்க மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் அக்கறை கொண்டுள்ளன. நிறைய உதவிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தத் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்றார்.