டெல்லி திகார் சிறையில் இட்லி, தோசை, ஊத்தப்பம் போன்ற தென்னிந் திய உணவு வகைகள் வழங்கப்படுகிறது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர தென்னிந்திய பிரபலங்கள் சிலரும், ஊழல் மற்றும் மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் உள்ளனர்.
ஆ.ராசா சிறை எண் 1-லும், கனிமொழி எம்.பி. சிறை எண்-6லும், சரத்குமார் சிறை எண் 4-லும் அடைக்கப்பட்டுள்ளனர். பொதுவாக திகார் சிறையில் வடஇந்திய உணவு வகைகள்தான் பரிமாறப்படுவது உண்டு. ஆனால் தற்போது இவர்களின் வசதிக்காக வடஇந்திய உணவுடன், தென்னிந்திய உணவு வகைகளும் வழங்கப்படுகிறது.இதற்கு வசதியாக இவர்கள் 3 பேரும் அடைக்கப்பட்டுள்ள ஜெயில்களின் கேண்டீன்களில் தென்னிந்திய உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையைச் சேர்ந்த டி.எஸ்.பி. ஒருவர், இந்த 3 கேண்டீன்களின் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இவரின் மேற்பார்வையில் தயாரிக்கப்படும் தென்னிந்திய உணவு வகைகளான தோசை, ஊத்தப்பம், இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி போன்றவை வழங்கப்படுகிறது.ஆ.ராசா இருக்கும் சிறை எண் 1-ல், பிப்ரவரி மாதம் முதலும், கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் இருக்கும் சிறைகளில் இம்மாதம் முதலும் மேற்கண்ட உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.