ஒரு இந்திய தமிழனுக்கும் - இலங்கைத் தமிழனுக்கும் உள்ள உணர்வு போராட்டமே எனது "ஆயுதப் போராட்டம்" படத்திற்கு கதைக்கரு என்கிறார் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் ஜெய் ஆகாஷ்! ஜெய்பாலாஜி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ஜெய் ஆகாஷ் இயக்கி நடித்திருக்கும் "ஆயுதப்போராட்டம்" படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு இலங்கையில் நடத்தப்பட்டிருக்க வேண்டுமாம். ஆனால் இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் பற்றிய கதையை உள்ளடக்கிய படமென்பதால் படப்பிடிப்பிற்கு அனுமதி மறுக்க, மொத்தப் படப்பிடிப்பையும் இலங்கையை ஒத்த தாய்லாந்தில் படம் பிடித்திருப்பதாக சமீபத்தில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறிய ஜெய் ஆகாஷ், ஹாங்காங், சீனாவிலும் சில காட்சிகளை படம் பிடித்துள்ளதாகவும் கூறினார்.
நாயகர் ஜெய் ஆகாஷ் முற்றிலும் மாறுபட்ட இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் ப்ரீத்தி மீனாள், அனிதா ரெட்டி என இரண்டு நாயகிகள் மேலும் சாய்கிரன், "ரேணிகுண்டா" புகழ் தீப்பெட்டி கணேஷ் உள்ளிட்டவர்களும் இப்பட நட்சத்திர பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். சாய்சதீஷ் ஒளிப்பதிவில் நந்தன் ராஜி இசையமைப்பில், ஜெய் ஆகாஷின் எழுத்து இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது "ஆயுதப்போராட்டம்."