வைரஸ் காய்ச்சல், நீர்ச்சத்து குறைவால் இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ரஜினிகாந்த். அவருக்கு முழு ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கியிருக்கிறார்.
பார்வையாளர்களை தவிர்த்து ஓய்வில் இருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார். போயஸ் தோட்ட இல்லத்தில் ஓய்வில் இருக்கும் ரஜினியின் உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. உடலில் இன்னும் சீரான முன்னேற்றம் ஏற்படாததால், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் நிலை குறித்து திடுக்கிட வைக்கும் வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசியில் ரஜினியின் உடல் நிலைப் பற்றி பேசியவாறு இருந்தனர். இதனால் செய்தியாளர்கள் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் குவிந்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் லதா ரஜினிகாந்த் கூறியது: ரஜினியின் உடல் நிலை பற்றி மிகவும் மோசமான வதந்திகள் வந்துள்ளன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. இப்போது குணம் அடைந்து வருகின்றார். ஓய்வில் இருக்குமாறு அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதைப் பின்பற்றி அவரும் ஓய்வில் இருந்து வருகிறார். ரஜினி மிகவும் சுறுசுறுப்பான மனிதர், ஓரிடத்தில் உட்கார வைப்பது கடினம். ஆகவே அவரை கவனமாக பார்த்துக் கொள்கிறோம். கோடை காலத்தில் வழக்கமாக வெளிநாடுகளுக்குச் செல்வோம். "ராணா' படப்பிடிப்பை தொடங்குவதில் அவசரம் காட்டமாட்டோம். தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதை அறிந்தோம். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எங்களது வாழ்த்துகள் என்றார் லதா ரஜினிகாந்த். |