"விஸ்வரூபம்" படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நடைபெற உள்ளது. அதற்குள் எப்படியாவது ஒரு நாயகியை பிடித்து விட வேண்டும் என்று நாயகி வேட்டையில் இறங்கியிருக்கிறார் கமல்ஹாசன். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் விஸ்வரூபமாக உருவாகவிருக்கும் விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக சோனாஷி நடிப்பதாக முதலில் செய்திகள் வெளியாயின. சோனாஷியும் கமலுடன் நடிக்கவிருப்பது பற்றி மெய்சிலிர்த்து பல பேட்டிகள் கொடுத்தார். இடையில் என்ன ஆனதோ தெரியவில்லை... சோனாஷி பற்றிய செய்தியே காணாமல் போய்விட்டது. படத்தின் நாயகி யார்? என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் புதிய நாயகியை தேடி மும்பையில் முகாமிட்டிருக்கிறாராம் கமல்ஹாசன்.
சமீபத்தில் விஸ்வரூபம் பட சூட்டிங் லொகேஷனுக்காக உலகத்தையே வலம் வந்த கமல்ஹாசன், படத்தில் தன்னுடன் ஜோடி சேரும் நடிகைக்காக மும்பையை வலம் வந்து கொண்டிருக்கிறாராம். அடுத்த மாதம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டிருக்கும் கமல்ஹாசன், அதற்கு முன்பு கதாநாயகியை கண்டுபிடித்து முடிவு செய்துவிட்டால், அவரையும் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று விடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறாராம்.