முன்பெல்லாம் விழாக்களில் நிறைய பேசுவேன். அந்த காலம் கடந்து விட்டது. இனிமேல் அளந்துதான் பேசுவேன். தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின், நான் ஊர் ஊராக சுற்ற ஆரம்பித்தேன். கேரளாவில் கொஞ்ச நாள், ஆந்திராவில் கொஞ்ச நாள் என வெளியூர்களில் தங்க ஆரம்பித்தேன். என் சூழ்நிலைக்கு தகுந்தபடி, ஒரு மலையாள பட வாய்ப்பு வந்தது. அங்கே போய் நடித்துவிட்டு வந்தேன். என் மகனுக்கு ஒரு தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. அதனால், ஐதராபாத்தில் சில நாட்கள் இருந்தேன். இனிமேல், நான் அளந்துதான் பேசுவேன். அதிகமாக பேசமாட்டேன். மைக்கை பிடித்து பேசாமல் இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன். நானே இப்படின்னா... வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. முன்பெல்லாம் சினிமாவில் கடும் உழைப்பு இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என்று நம்பினேன். இப்போது அப்படி அல்ல. நேரம் நன்றாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதை காலதாமதமாக உணர்ந்தேன். சுப்பிரமணியபுரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் என் மகனுக்குத்தான் வந்தது. அந்த வாய்ப்பை நழுவ விட்டேன். அடுத்து, களவாணி படத்தில் நடிக்கும் வாய்ப்பும் முதலில் என் மகனுக்குத்தான் வந்தது. பிறகு அதுவும் கைநழுவிப்போனது. என் மகனுக்கு நேரம் நன்றாக இருந்தால், அந்த இரண்டு பட வாய்ப்புகளும் கிடைத்து இருக்கும், என்று பாக்யராஜ் பேசினார். நிகழ்ச்சியில், டைரக்டர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், வசந்த், அமீர், சிம்புதேவன், விஜய், பிரபு சாலமன், ஜனநாதன், பாண்டிராஜ், பொன்வண்ணன், தம்பி ராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் நேரத்தில் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் செய்து குட்டிக் குட்டி கதைகள் சொல்லி எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு பிரசாரம் செய்த பாக்யராஜ், திமுக தோல்யடைந்ததைத் தொடர்ந்து பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். நேற்று நடந்த விழாவில் பேசிய பாக்யராஜ், இன்னமும் விரக்தியில் இருப்பதாகவே தெரிகிறது. பாக்யராஜ் ஒருவழியாக வெளியே தலைகாட்டி விட்டார். வடிவேலு நிலைமை இன்னமும் மோசமாகத்தான் இருக்கிறது. அவர் தேர்தல் முடிவுக்கு பிறகு எந்த விழாவுக்கு வரவில்லை; பத்திரிகையாளர்களை சந்திப்பதையும் தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. |