தமிழக மக்களும், ரசிகர்களும்தான் எனக்கு ஏணியாக இருந்து தாதா சாஹேப் விருது பெற வைத்தனர் என்று டைரக்டர் கே.பாலசந்தர் நெகிழ்ச்சியுடன் கூறினார். தாதா சாஹேப் பால்கே விருது பெறும் டைரக்டர் கே.பாலசந்தருக்கு பிரம்ம கான சபா சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடந்தது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி தலைமையில் நடைபெற்ற விழாவில் நடிகர்கள் கிரேஸி மோகன், இளவரசு உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பாலசந்தர் நெகிழ்ச்சியுடன் பேசினார். அவர் பேசும்போது, கணக்கு தணிக்கைத் துறை அலுவலகத்தில் நான் பணியாற்றியபோது தியாகராய நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட வந்ததையெல்லாம் நினைவில் வைத்து நல்லி குப்புசாமி பேசினார். நான் அப்போது இயக்குநர்கூட இல்லை. அலுவலக ஊழியர்தான். அப்போது என்னைப் பார்த்ததை இப்போதும் ஞாபகம் வைத்து அவர் சொன்னது எனக்கு சந்தோஷமாக இருந்தது. நல்லி குப்புசாமி இருக்கிறவரை கலைஞர்களுக்குப் பஞ்சமே இருக்காது. அவரைக் கலையுலக சக்ரவர்த்தி என்பேன். திரையுலகில் எத்தனையோ பேரை ஏற்றி வைத்த ஏணி என்று என்னை அவர் பாராட்டினார். ஏற்றி வைத்த ஏணி என்றால் ஏணி அதே இடத்தில் இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் எனக்கு அப்படி அமையவில்லை. தமிழக மக்களும், ரசிகர்களும் எனக்கு ஏணியாக இருந்து தாதா சாஹேப் பால்கே விருது பெற வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி, என்றார்.இந்த தாதா சாஹேப் விருதை தனது அபிமான ஆசான் ஆர்.எம். வீரப்பனின் காலடியில் சமர்ப்பிப்பதாகவும் பாலசந்தர் குறிப்பிட்டார். தெய்வத்தாய் என்ற படத்தில் வசனம் எழுதுவதற்கு முதன் முதலில் பாலச்சந்தருக்கு வாய்ப்பு கொடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.