Thursday, May 19, 2011
கஞ்சா கருப்புக்கு குழந்தை பிறந்த நேரம், அவரை ஹீரோவாக மாற்றி இருக்கிறது. இதுவரை காமடியனாக நடித்து வந்த கஞ்சா கருப்பு, முதன்முறையாக "மன்னார் வளைகுடா" என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்குகிறார்.
பாலாவின் "பிதாமகன்" படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் கஞ்சா கருப்பு. அதனைத்தொடர்ந்து அமீரின் "ராம்" படத்தின் மூலம் பிரபலமான அவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் காமடியனாக நடித்துள்ளார். இதுவரை காமடியனாக நடித்து வந்த கஞ்சா கருப்பு முதன்முறையாக ஹீரோவாக அவதரிக்க இருக்கிறார். டைரக்டர் மாதேஷிடம் "அரசாங்கம்", "தில்லு முல்லு" போன்ற படங்களில் உதவியாளராக பணிபுரிந்த தனசேகரன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். "மன்னார் வளைகுடா" என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், கஞ்சா கருப்புக்கு மூன்று ஹீரோயின்களாம், அதுவும் புதுமுகங்களாம். மீனவர் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் மீனவராக நடிக்கிறார் கஞ்சா கருப்பு.
இப்படம் குறித்து டைரக்டர் தனசேகரன் கூறியதாவது, மன்னார் வளைகுடா படம், மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது. சாதாரண மனிதன் ஒருவர் கோபப்பட்டால் என்ன ஆகும் என்பதே படத்தின் கதை. இப்படத்தின் கதை சில உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கற்பனையாக எடுக்கப்பட இருக்கிறது. முதன்முறையாக இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் கஞ்சா கருப்பு. படத்தில் அவர் மீனவராக வருகிறார். படத்தின் ஆரம்ப காட்சி முதல் இறுதி காட்சி வரை கஞ்சா கருப்பு தான் தோன்றுவார். படத்தில் அவருக்கு மூன்று கதாநாயகிகள். மூன்று பேரும் புதுமுகங்கள் தான். படத்தில் பாடல்கள் உண்டு, ஆனால் டூயட் காட்சிகள் கிடையாது. தனி மனித வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சற்று காமெடியாவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லும் படமாக "மன்னாள் வளைகுடா" படம் இருக்கும். விரைவில் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ராமேஸ்வரத்திலும், சில காட்சிகளும் திருச்சியிலும் எடுக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.