Monday, May 09, 2011
சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் என்னை பற்றி பேச வைத்தது "மைனா" படம் தான் என நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா கூறினார்.நடிகர் தம்பி ராமையா மற்றும் இயக்குநர் தருண்கோபி ஆகியோர் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டியில் பிரத்தியங்கரா தேவி கோவிலில் நடைபெற்ற மகா யாகத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.
யாகத்தில் கலந்து கொண்ட அவர்கள் பின்னர் பேட்டி அளித்தனர். அப்போது தம்பி ராமையா, எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ரா.ரா.புரம். ஒரு நட்சத்திர உணவகத்தில் மேலாளராக வேலை பார்த்தேன். பின்னர் சினிமா மீது மோகம் வந்து "வீரபாண்டி கோட்டையிலே", "மாப்பிள்ளை கவுண்டர்" ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தேன். பின்னர் நகைச்சுவை எழுதி அதில் நான் நடித்து வந்தேன். நான் முதன் முதலாக "மனுநீதி" என்ற படத்தை இயக்கினேன். அது மக்கள் மத்தியில் பேசப்பட்டது. பின்னர் நடிகர் வடிவேலுவை வைத்து "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்" என்ற படத்தை இயக்கினேன். இதுவரை 50 க்கும் மேற்பட்ட சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் தம்பி பிரபுசாலமனின் "மைனா" படத்தில் நடித்தது தான் என்னை சினிமா உலகில் பரப்பரப்பாக பேசப்பட்டது. இந்த படத்திற்கு பின் அதிகளவு ரசிகர்கள் என்னை தொலைபேசி மூலமும், நேரடியாகவும் வாழ்த்து தெரிவித்தனர். கழுகு, கள்ளச் சிரிப்பழகா, வாகை சூட வா, வேங்கை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் எடுத்து வரும் "பேச்சியக்கா மருமகன்" என்ற படத்திலும் ஒரு "3D" படத்திலும் நடித்து வருகிறேன். |