Saturday, May 14, 2011
தமிழக தேர்தல் முடிவு பற்றி தினத்தந்தி நிருபரிடம் நடிகர் விஜய் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று நான் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விரும்பினார்கள். மக்களின் விருப்பம் இந்த தேர்தல் மூலம் நிறைவேறி இருக்கிறது. இத்தனை பெரிய மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதா அம்மாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த சமயத்தில் என் மன்றங்களை சேர்ந்த ஒவ்வொரு மாவட்ட தலைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக மக்கள் இயக்கத்தை சேர்ந்த சகோதரர்கள் அனைவரும் அ.தி.மு.க. வெற்றிக்காக உழைத்து இருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு, முக்கியமாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு விஜய் கூறினார். நடிகர் வடிவேல் கூறியதாவது:-
தேர்தல் பிரசாரத்தின்போது நான் விஜயகாந்தை விமர்சித்தேன். அதற்காக, சென்னையில் என் வீட்டை அவருடைய கட்சியினர் தாக்க முயன்று இருக்கிறார்கள். என்னைப்பற்றி ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள். அவர்களை போலீசார் அடித்து விரட்டியிருக்கிறார்கள். தேர்தல் முடிவு பற்றிய என் கருத்தை நாளை (இன்று) தெரிவிக்கிறேன். மேற்கண்டவாறு வடிவேல் கூறினார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர்.ஜி. கூறியதாவது:-
இந்த தேர்தலில், அ.தி.மு.க. தனி மெஜாரிட்டியில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. தர்மம் வெற்றி பெற்று இருக்கிறது. அதர்மம் தோல்வி அடைந்து இருக்கிறது. இவ்வாறு கே.ஆர்.ஜி. கூறினார். பட அதிபரும், டைரக்டருமான கேயார் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று அனைத்து தரப்பினரும் ஆசைப்பட்டார்கள். அவர்களின் ஆசை நிறைவேறி விட்டது. சினிமா உலகில், யார் வேண்டுமானாலும் படம் தயாரிக்கலாம்.
ஆனால், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தியவர்களுக்கு இந்த தேர்தல் முடிவு ஒரு பாடம். மேற்கண்டவாறு கேயார் கூறினார். திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் கூறியதாவது:-
இந்த தேர்தல் முடிவை மிகுந்த மகிழ்ச்சியுடன வரவேற்கிறேன். அரசியலில் மாற்றம் ஏற்பட்டது போல், எங்கள் திரையுலகிலும் மாற்றம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு கலைப்புலி ஜி.சேகரன் கூறினார்.