லட்சக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் படம் ரீலிஸ் ஆகும் நாளில் பிரமாண்ட கட்-அவுட் வைப்பதும், அந்த கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதும் ரசிகர்களின் தலையாய கடமை. அதேபோல படத்தை தயாரித்த நிறுவனம் சார்பில் பூசணிக்காய் உடைத்து படம் வெற்றிபெற பிரார்த்திக்கும் வைபவம் நடந்தேறும். இரண்டையும் பார்த்து உச்சி குளிர்வதுதான் ஹீரோவின் வேலை. ஆனால், 180 என்று படத்தின் பெயரையே வித்தியாசமாக வைத்திருக்கும் சத்யம் சினிமாஸ் - அகல்பிலிம்ஸ், பட ரீலிசை ரத்ததானம் செய்து கொண்டாடியிருக்கிறார்கள்.
டைரக்டர் ஜெயேந்திரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 10 படத்தின் ரீலிசை முன்னிட்டு, சென்னையில் ரத்ததான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் படத்தின் நாயகி ப்ரியா ஆனந்த், நடிகை ஸ்ரீசரன், நடிகை ஜானகி சபேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரின் கவனத்தை ஈர்ப்பதிலேயே குறியாக இருக்கும் படக்குழுவினருக்கு மத்தியில், வித்தியாசமான... அதே நேரம் உபயோகமான ரத்ததான நிகழ்ச்சியை நடத்தி எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது 180 படக்குழு.