முன்பெல்லாம் படங்கள் வெற்றி பெற்றால் தான் விழா எடுத்து கொண்டாடுவார்கள். ஆனால் இப்போது அந்த படம் வெற்றிபெறவே பல்வேறு வகையான உத்திகளை கையாளுகின்றனர். ஆடியோவிற்கு ஒரு விழா, டிரைலருக்கு ஒரு விழா என்று தனித்தனியாக விழா எடுக்கின்றனர். இதுதவிர நிறைய விளம்பரங்கள் வேறு. இப்போது அதிலும் ஒரு பேஷன் புகுத்தியுள்ளனர். இந்த பேஷனை துவக்கி வைத்தது சிம்புவின், "வானம்" டீம் தான். "வானம்" படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தையும் ரிலீஸ் செய்யாமல், அதிலிருந்து ஒரு பாடலை மட்டும் ரிலீஸ் செய்தனர். இப்போது இந்த கலாச்சாரத்தை பலரும் பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
"வானம்" படத்தின் "எவன்டி உன்ன பெத்தான்..." பாடலில் ஆரம்பமானது, இப்போது அஜீத்தின் 50வது படமான "மங்காத்தா" படத்திலும் தொடர்கிறது. மங்காத்தாவில் மொத்தம் ஒன்பது பாடல்கள், ஆனால் அதில் "விளையாடு மங்காத்தா..." என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் ரிலீஸ் செய்துள்ளனர். இதே பாலிசியை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து, தயாரிக்கும் "நான்" படத்திலும் பின்பற்ற இருக்கின்றனர். இப்போதெல்லாம் படம் ஓடுதோ இல்லையோ, அந்தபடத்தை வெற்றி பெறச் செய்ய, விளம்பரங்களுக்கு மட்டும் பஞ்சமிருக்காது. அதிலும் புதுபுது டெக்னிக் வேறு! கேட்டால் பேஷனாம்...!!