தமிழ்த்திரைப்பட இயக்குநர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக மீண்டும் பாரதிராஜவே வெற்றி பெற்றுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்திரைப்பட இயக்குநர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். கடந்த இரண்டு வருடமாக இயக்குநர் பாரதிராஜா தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் சங்க தேர்தல் இன்று(19.06.11) நடந்தது. பாரதிராஜா தலைமையிலான ஒரு அணியினரும், உதவி இயக்குநர் முரளி தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட்டனர். சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் யூனியன் வளாகத்தில் காலை 8 மணிக்கு ஓட்டுபதிவு தொடங்கியது. தேர்தல் அதிகாரியாக கவிஞர் பிறைசூடன் செயல்பட்டார்.
தலைவர் பதவிக்கு பாரதிராஜாவும், உதவி இயக்குநர் முரளியும் போட்டியிட்டனர். செயலாளர் பதவிக்கு அமீரும், அவரை எதிர்த்து அப்துல் மஜீத்தும் போட்டியிட்டனர். இதுதவிர 4 இணைச் செயலாளர்கள் பதவிக்கு 10 பேரும், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 34 பேரும் போட்டியிட்டனர்.காலைமுதலே இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் பலர் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், கே.எஸ்.ரவிக்குமார், அமீர் சசிகுமார், எஸ்.ஏ.சந்திரசேகர், தியாகராஜன், ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் வந்து ஓட்டளித்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடந்தது போன்று, இயக்குநர் சங்க தேர்தலிலும் அதிகளவு ஓட்டுகள் பதிவாகின. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 99 சதவீத ஓட்டுபதிவு நடந்துள்ளது. தேர்தலில் ஓட்டு போடுபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் எப்பவும் 4மணிக்கு முடியும் தேர்தல் ஒரு மணி நேரம் கூடுதலாக 5மணி வரை நடந்தது. பிறகு தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கான ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் மாலை 8மணிக்கு மேல் வெளியிடப்பட்டது. இதில் பாரதிராஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட, உதவி இயக்குநர் முரளியை விட ஆயிரம் ஓட்டிற்கு மேல் வாங்கி அமோக வெற்றி பெற்றார். இதனை தேர்தல் அதிகாரியும், கவிஞருமான பிறைசூடன் அறிவித்தார். இதனையடுத்து இயக்குநர் சங்க தலைவராக பாரதிராஜா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்கனவே பொருளாரார் பதவிக்கு ஜனநாதனும், துணைத்தலைவர் பதவிக்கு சேரன், சமுத்திரகனி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். இதுதவிர பொதுச்செயலாளர் பதவி, மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட இருக்கிறது.
Sunday, 19 June 2011
இயக்குநர் சங்கதேர்தலில் பாரதிராஜா வெற்றி.
Sunday, June 19, 2011