

படத்தில் ஜமீன் தீர்த்தபதி என்று ஒரு கிராமத்தை காட்டுகிறார்கள். அங்கு தீர்த்தபதி என்று ஒரு கேரக்டரை உருவாக்கி அவர் குடிப்பது போன்றும், சுற்றுலா விடுதியில் சண்டை போடுவது போன்றும் இறுதியில் அவரை நிர்வாணமாக விட்டு பொதுமக்கள் அடிப்பது போன்றும் உள்ளது.
மற்றொரு காட்சியில் சொரிமுத்து என்ற கேரக்டரை உருவாக்கி இந்த கோவிலை நம்பிதான் நீங்க வாழ்ந்திட்டிருக்கிறீங்க என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இதற்கு அம்பை,ஆலங்குளம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
அம்பை,சிங்கை மற்றும் நெல்லையில் பல இடங்களில் இதுபற்றிய கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவன்-இவன் படத்துக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக சிங்கம்பட்டி சமஸ்தானம் அறிவித்து உள்ளது.
இதுபற்றி சிங்கம்பட்டி சமஸ்தானம் இளைய ஜமீன்தார் டி.எம்.டி. தாயப்பராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிங்கம்பட்டி ஜமீன் மூலம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கடந்த 1910ல் தீர்த்தபதி ராஜா பெயரில் இலவச ஆஸ்பத்திரிகள், பள்ளி கூடங்கள் அமைக்கப்பட்டு, இன்றும் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நெல்லை டவுன் தேரோட்ட வீதிகளில் தண்ணீர் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையார் சொரிமுத்தையனார் கோயில் இந்த ஜமீனுக்கு பாத்தியப்பட்டது. இங்கு, பல்வேறு விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. ஆடி அமாவாசையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அன்று, சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ராஜா, ராஜ தரிசனம் வழங்கி வருகிறார். இன்றும் இப்பகுதி மக்கள் ஜமீன் மீது பாசத்துடனும், மரியாதையுடனும் இருந்து வருகின்றனர். ஜமீன் மூலம் மக்களுக்கு இயன்ற உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.
புகழ் பெற்ற இந்த ஜமீனையும், பழமை வாய்ந்த சொரிமுத்தையனார் கோயிலையும் “அவன் இவன்’ படத்தில் அவதூறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் பாலாவை கண்டிப்பதுடன், அவதூறு காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.