நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி மற்றும் நிர்வாகிகள் சத்யராஜ், மனோரமா, மயில்சாமி, குயிலி, கே.ஆர். செல்வராஜ் ஆகியோர் நேற்று சென்னை கோட்டையில் முதல்அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.
30 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் வெளியே வந்த சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
முதல்அமைச்சர் பொறுப்பு ஏற்றதற்காக ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தோம். அப்போது முதல் அமைச்சரிடம் சில கோரிக்கைகளையும் முன் வைத்தோம்.
முதல்வர் பதவி ஏற்றதுமே கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இலங்கைக்கு இந்திய அரசு பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்றும் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக நன்றி தெரிவித்தோம். இந்த தீர்மானங்களை பாராளுமன்றம் மூலம் நிறைவேற்ற வலியுறுத்தி கவர்னரிடம் நடிகர் - நடிகைகள் ஊர்வலமாக சென்று மனு கொடுக்க திட்டமிட்டு உள்ளோம்.
பேரணியை எந்த திகதியில் நடத்துவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. நடிகர் - நடிகைகளிடம் கலந்து ஆலோசித்து திகதி முடிவு செய்யப்படும்.
இதனை முதல்வரிடம் தெரிவித்து உள்ளோம்.மூன்றாவது முறையாக முதல்வரான ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த விருப்பப்படுகிறோம்.
இதனை முதல்வரிடம் தெரிவித்தோம். ஆனால் அவர் துறை தோறும் நிறைய ஆய்வு கூட்டங்கள் நடத்த வேண்டி இருப்பதால் பாராட்டு விழா இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டார்.
ஆனாலும் பாராட்டு விழாவை நடத்த நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார். |