Monday, June 20, 2011
மான்கறி தின்றவர், மனித கறி பார்த்தவர் (கார் விபத்து ஏற்படுத்தி...) என எண்ணற்ற குற்றச்சாட்டுகளுக்கு ஒரு காலத்தில் ஆளான இந்தி நடிகர் சல்மான்கான், ஸ்டண்ட்மாஸ்டர் "பெப்ஸி" விஜயன் தமிழில் இயக்குநர் அவதாரம் எடுத்து, தன் மகன் சபரீஷை ஹீரோவாக அறிமுகம் செய்யும் "மார்க்கண்டேயன்", படத்தின் ஆடியோ வெளியீட்டிற்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அமைந்தகரை பி.வி.ஆர்., காம்ப்ளக்ஸ் திரையரங்கிற்குள் நடந்த அந்த விழாவிற்கு 2மணி நேரம் தாமதமாக வந்த சல்மானுடன் நடிகர் விஜய்யும் ஒரு வழியாக வந்து சேர்ந்து கொள்ள, மாலை 7 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய விழா ஒரு வழியாக சுமார் 9மணிக்கு ஆரம்பமாகி 10.30மணி வரை தொடர்ந்தது.மான்கறி, மனிதகறியை எல்லாம் மறந்து "பீயிங் ஹீயூமன்" எனும் எழுத்துக்கள் பொறித்த டி.சர்ட்டுடன் விழாவில் கலந்து கொண்ட சல்மானின் பாதுகாப்பிற்கு வந்தவர்கள் டி-சர்ட்டுகளிலும் "பீயிங் ஹீயூமன்" எனும் வாசகம். ஆனால் சல்மானுக்காகவும், விஜய்க்காகவும் சுமார் இரண்டரை மணி நேரங்கள் காத்திருந்தனர் வி.சி.குகநாதன், கேயார், சீமான் உள்ளிட்ட பிரபலங்களில் தொடங்கி நண்டு, சிண்டு, பொண்டு, பொடிசு உள்ளிட்ட ரசிகர்கள் வரை! அதுபற்றி கவலைபடாமல் சண்டிகரில் இருந்து வந்தேன், சைனாவில் இருந்து வந்தேன் என சாக்கு போக்கு சொல்லிய சல்மானும், விஜய்யும் சபை நாகரீகத்திற்காக ஒரு அப்பாலஜி கூட கேட்காதது ஆடியன்ஸ்க்கு மேலும் வருத்தத்தை தந்தது. இதில் எங்கே மனிதம் வாழ்வது...? சல்மானுக்கே வெளிச்சம்!