சினிமா படப்பிடிப்புக்காக கொரியா அழைத்துச் சென்று தயாரிப்பாளர் என்னை ஏமாற்றி விட்டார் என்று சென்னை திரும்பிய நடிகை லக்ஷா கூறினார். மாஜி கவர்ச்சி நடிகை பபிதாவின் மகள் லக்ஷா. பல படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கும் இவரை லாலி, என்ற புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்கான பாடல் காட்சியையும், சில முக்கிய காட்சிகளையும் தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் படமாக்க திட்டமிட்டார்கள். இதற்காக, லக்ஷா கடந்த 19ம்தேதி சென்னையில் இருந்து தென்கொரியாவுக்கு புறப்பட்டார். அவருடன் தந்தை ஜூடோ ராமுவும் சென்றார். ஒளிப்பதிவாளர், அவருடைய உதவியாளர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் 13 பேர் உடன் சென்றார்கள். வழியில், டெல்லியில் இருந்து 29 பேர்களை துணை நடிகர்கள் என்ற பெயரில் அழைத்து சென்றதாக தெரிகிறது.
படப்பிடிப்பை முடித்துவிட்டு, கொரியாவில் இருந்து சென்னை திரும்ப முயன்றபோது, டெல்லியில் இருந்து அழைத்து செல்லப்பட்ட 29 பேர்களையும் காணவில்லை. அவர்கள் திடீர் மாயமாகி விட்டார்கள். அந்த 29 பேர்களையும் கண்டுபிடித்து கொடுத்துவிட்டு திரும்பி செல்லுங்கள் என்று கொரியா போலீசார் படப்பிடிப்பு குழுவினரை பிடித்து வைத்துக்கொண்டார்கள். அத்துடன் படப்பிடிப்பு கட்டணம் ரூ.8 லட்சத்தையும் உடனே கட்ட வேண்டும் என்றும் கூறினார்கள். 29 பேர்களையும் கண்டுபிடித்து கொடுக்க முடியாததாலும், படப்பிடிப்பு கட்டணம் ரூ.8 லட்சத்தை கட்ட முடியாததாலும் லக்ஷா உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் சென்னைக்கு திரும்ப முடியாமல், சியோல் நகரில் சிக்கி தவித்தார்கள்.லக்ஷாவும், அவருடைய தந்தை ஜூடோ ராமுவும் சொந்த பணத்தில் விமான டிக்கெட் எடுத்து, சென்னை திரும்பினார்கள். கொரியாவில் நடந்தது என்ன? என்பது பற்றி லக்ஷா அளித்துள்ள பேட்டியில், எல்லா படங்களுக்கும் ஒப்பந்தம் போடுவது மாதிரிதான் லாலி படத்துக்கும் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் சித்திரைச்செல்வன் என்னை முறைப்படி ஒப்பந்தம் செய்தார். தென்கொரியாவுக்கு அவர் வரவில்லை. அவருக்கு பதில், அசோசியேட் டைரக்டரை அனுப்பி வைத்தார். சியோல் நகரில், 4 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன்பிறகு புயல் மழை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. சரி, ஊருக்கு திரும்பி விடலாம் என்று முயற்சித்தபோதுதான், நாங்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்தோம். டெல்லியில் இருந்து அழைத்து வந்த 29 பேர்களால்தான் பிரச்சினை ஏற்பட்டது. படப்பிடிப்பு என்ற பெயரில் அவர்களை எங்களுடன் அழைத்து வந்து, ஏமாற்றி விட்டார் தயாரிப்பாளர். அதோடு, ரூ.7 லட்சம் கொடுத்தால்தான் லக்ஷா கொரியாவில் இருந்து சென்னைக்கு திரும்பி வர முடியும், என்று என் அம்மாவை அவர் மிரட்டியிருக்கிறார். ஒருவழியாக, நாங்கள் சொந்த பணத்தை செலவழித்து சென்னை திரும்பி விட்டோம். ஆனால், படப்பிடிப்பு குழுவை சேர்ந்த இன்னும் 6 பேர் தென்கொரியாவில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். காணாமல் போன 29 பேர்களையும் கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும். படப்பிடிப்பு கட்டணம் ரூ.8 லட்சத்தையும் கட்ட வேண்டும். இந்த இரண்டும் நடந்தால்தான் 6 பேர்களையும் கொரியா போலீசார் விடுவிப்பார்கள், என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.