Saturday, July 02, 2011
தமிழ் மரபுகளை காப்பாற்றும் ஒவ்வொரு ஆண், பெண்ணின் பெருமையை பேசும் "களவாடிய பொழுதுகள்" பட சூட்டிங் முடிந்ததும் அப்படத்தின் ஹீரோ பிரபுதேவா கண் கலங்கியதாக டைரக்டர் தங்கர் பச்சான் தெரிவித்தார். "களவாடிய பொழுதுகள்" படம் ரீலிசுக்கு தயாராகியுள்ள நிலையில் டைரக்டர் தங்கர்பச்சான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களில், 80 சதவீதம் பேர் காதலித்தவர்கள்தான். என் இயக்கத்தில், "அழகி" படம் காதலின் ஒரு பரிமாணத்தை சொன்னது. "களவாடிய பொழுதுகள்" இன்னொரு பரிமாணத்தை சொல்லப் போகிறது. ஒவ்வொரு ஆண், பெண்ணின் மணவாழ்க்கைக்கு முன்பும் அவர்கள் வாழ்க்கையில் காதல் எட்டிப்பார்த்து இருக்கும். வாழ்க்கையின் நெறிகளை மதித்து, மறைத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பல நேரங்களில், சமுதாயத்துக்காக பொய் சொல்லி வாழ வேண்டியிருக்கிறது. தமிழ் மரபுகளை காப்பாற்றுகிற ஒவ்வொரு ஆண், பெண்ணின் பெருமையை இந்த படம் பேசும். காதலித்தவர்கள், காதலிக்கிறவர்கள், காதலிக்க போகிறவர்கள் மத்தியில் கேள்வியை எழுப்புகிற படமாக இருக்கும்.
இந்த கதைக்கு பிரபுதேவா நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருந்தார். அவர் எந்த இடத்தில் நடித்து இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார். படத்தின் குரல் பதிவு முடிந்ததும், பிரபுதேவா ஒரு மணி நேரம் தனியாக உட்கார்ந்திருந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. எனது கண்களும்தான்... வாழ்க்கையை உரசிப்பார்க்கிற உரையாடல்களும், சம்பவங்களும் ஒவ்வொருவரையும் பாதிப்பது இயல்புதானே. அந்த வகையில் பிரபுதேவா கதையுடன் ஒன்றி கண்ணீர் வடித்தார். நயன்-பிரபுதேவா காதல் பற்றி கேட்டபோது, அது அவருடைய தனிப்பட்ட விஷயம், அவர் வாழ்க்கையை தீர்மாணித்துக்கொள்ள அவருக்கு எல்லாம் உரிமையும் உண்டு, இதுபற்றி வேறு எதுவும் கூற விரும்பவில்லை.
இவ்வாறு தங்கர் பச்சான் கூறினார்.