Monday, June 06, 2011
தென்இந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான த்ரிஷா, பீட்டா நிறுவனத்தின் புதிய விளம்பரத்தில் ஆதரவற்ற நாய்களுக்கு ஒரு தேவதையாக திகழ்கிறார் த்ரிஷா. மேலும் தனது ரசிகர்களையும் ஆதரவற்ற நாய்களை தத்தெடுத்து தேவதையாக மாறுங்கள் என்று அட்வைஸ் பண்ணுகிறார். பீட்டாவின் புதிய விளம்பரத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார். அதில் த்ரிஷா, பம்பி என ஒரு நாயுடன் தோன்றுகிறார். குட்டியாக தெருக்களில் பம்பி திரிந்த போது பள்ளி மாணவர்களால் துன்புறுத்தப்பட்டு வருகிறது. அப்போது வாகன ஓட்டி ஒருவர் அந்த குட்டியை மீட்டு பாதுகாக்கிறார். இதுபோன்று விலங்குகளை தத்தெடுத்து மக்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக த்ரிஷா அந்த விளம்பரத்தில் "வசிப்பிடமற்ற நாயை தத்தெடுங்கள், தேவதையாக இருங்கள்" என்ற வாசகத்துடன் தோன்றுகிறார்.
இதுகுறித்தும், தனது செல்ல நாய் "கேட்பரியை" எப்படி மீட்டார் என்பது பற்றியும் த்ரிஷா சுவாரஸ்யமாக கூறியதாவது, ஒரு படத்தின் சூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்றபோதுதான் எனது கேட்பரியை பார்த்தேன். நாங்கள் காரில் சென்று கொண்டிருந்தோம், அப்போது ஒரு குட்டி நாய் காயமுற்று இருப்பதை பார்த்தேன். அதனால் நடக்க கூட முடியவில்லை. மேலும் அது மழையில் நனைந்தபடி இருந்தது. பிறகு அந்த குட்டியை மீட்டு, மருத்துவர் ஒருவரிடம் காண்பித்து அதை குணமடைய செய்தோம். அதன்பின் ஒவ்வொரு நாளும் எங்களுடைய படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடும். நான் எங்கு போனாலும் என்னுடன் வரும். இப்படியே ஒருநாள் என்னுடைய வீட்டிற்கே வந்துவிட்டது. பிறகு அந்த குட்டியை என்னுடன் வைத்து வளர்க்க ஆரம்பித்தேன். அதற்கு கேட்பரி என்று பெயரிட்டு எனது குழந்தையை போன்று பராமரித்து வருகிறேன்.
இதுபோன்று இந்தியா முழுவதும் தெரு நாய்களும், பூனைகளும் தெருக்களில் உயிர்வாழ போராடுகின்றன. அவற்றில் பல பட்டினியால் இறக்கின்றன. சில விபத்தில் காயமோ அல்லது இறக்கவும் செய்கின்றன. இதற்கு முக்கிய காரணம் அவைகளுக்கு போதுமான நல்ல வசிப்பிடங்கள் இல்லாதது தான். எனவே இதுபோன்ற விலங்குகளை நம்மை போன்றவர்கள் தத்தெடுப்பதன் மூலம் அவைகளிடம் நாம் காண்பிக்கவும், வசிப்பிடம் இல்லாத விலங்குகளை தத்தெடுப்பதன் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று கூறுகிறார்.