டைரக்டர் செல்வராகவனுக்கும், அவரது காதலி கீதாஞ்சலிக்கும் வரும் 3ம்தேதி திருமணம் நடக்கிறது. காதல் கொண்டேன் படத்தை இயக்கியபோது, அப்படத்தின் நாயகி சோனியா அகர்வாலுடன் காதல் கொண்ட டைரக்டர் செல்வராகவன், பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சோனியா அகர்வால் சினிமாவில் நடிப்பதை செல்வராகவன் விரும்பவில்லை. காதல் கணவரின் விருப்பத்திற்கேற்ப சோனியாவும் சினிமாவையும், சினிமா விழாக்களையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு விவாகரத்து வரை சென்றது. விவாகரத்திற்கு பிறகு சுதந்திரமாக இருக்கிறேன் என்று கூறி வரும் சோனியா, பொது நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சியான உடையணிந்து வந்து வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார்.
செல்வராகவனோ... ஆண்ட்ரியாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பின்னர் அவருடன் பணியாற்றிய உதவி இயக்குனர் கீதாஞ்சலியை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்யப்போவதாகவும் அறிவித்தார். இதையடுத்து வரும் ஜூலை 3ம்தேதி திருமண தேதி முடிவு செய்திருக்கிறார்கள். இதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்த செல்வராகவன், சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாத என்னை இந்தளவுக்கு பாராட்டி வளர்த்ததும் நீங்கதான். விமர்சித்ததும் நீங்கதான். திட்டியதும் நீங்கதான். நான் இந்த நிலைமைக்கு இங்கு நிற்பதற்கும் நீங்கதான் காரணம். ஒரு பெற்றோர் ஸ்தானத்தில்தான் உங்களை வைத்து பார்க்கிறேன், என்று உணர்ச்சி பொங்க பேசிய பின்னர் திருமண அழைப்பிதழை வழங்கினார்.