நடிகர் ஜெய் - நடிகை அஞ்சலி ஜோடி நடிக்கும் "எங்கேயும் எப்போதும்" பட சூட்டிங்கில் ஆசிட் வீசப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதில் 7 பேருக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசின் சொந்த பட நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்டு வரும் புதிய படம் "எங்கேயும் எப்போதும்". டைரக்டர் சரவணன் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இறுதிக்கட்ட சூட்டிங், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்தது. இதில் சுமார் 150 துணை நடிகர் - நடிகைகள் பங்கேற்றனர்.
அப்போது மருத்துவமவை நிர்வாகிகளுக்கும், படக்குழுவினருக்கும் இடையே கட்டணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு குழுவினரை வெளியே போகும்படி, மருத்துவமனை நிர்வாகம் கூறியதாகவும், படப்பிடிப்பு குழுவினர் வெளியேற மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் அங்கு நடித்துக் கொண்டிருந்த 7 துணை நடிகர்கள் வாந்தியெடுத்து, மயங்கி விருந்தனர். உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சூட்டிங்கின்போது ஆசிட் வீசப்பட்டதால்தான் துணை நடிகர்கள் மயங்கி விழுந்ததாக படக்குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.