"எந்திரன் பட வர்த்தக ஒப்பந்தப்படி, 1.55 கோடி ரூபாயை தராமல் இழுத்தடிக்கும், "சன் பிக்சர்ஸ், ஐயப்பன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத் தரும்படி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், தியேட்டர் உரிமையாளர்கள் ஆறு பேர், மனு அளித்துள்ளனர்.திரைப்பட தயாரிப்பு, வினியோகம் உள்ளிட்டவற்றை செய்து வருகிறது "சன் பிக்சர்ஸ். இந்த நிறுவனத்தின் சார்பில், "தீராத விளையாட்டு பிள்ளை படம் வினியோகம் செய்யப்பட்டது. இப்படத்தை, சேலம் பகுதியில் உள்ள தியேட்டர்களில் வினியோகிக்க, செல்வராஜுடன் ஒப்பந்தம் செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், 1.25 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் எழுந்தது.
இதன் பேரில், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சண்முகவேல் என்பவர் நேற்று முன்தினம் அளித்த புகாரின் அடிப்படையில் சக்சேனாவும், அவரது கூட்டாளியான ஐயப்பனும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், "எந்திரன் படத்திற்கான வர்த்தக ஒப்பந்தப்படி தங்களுக்கு சேர வேண்டிய, 1.55 கோடி ரூபாயை சன் பிக்சர்ஸ், ஐயப்பன் மற்றும் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்தினர் தராமல் இழுத்தடிப்பதாக, ஆறு தியேட்டர் உரிமையாளர்கள், கமிஷனர் திரிபாதியிடம் புகார் அளித்துள்ளனர்.