

இப்போது சினிமாவின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அப்போது என் படங்களுக்கு பிரமாண்ட செட்கள் போட்டேன். 500 கார்பென்டர்கள் பணியாற்றினார்கள். இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. கோடம்பாக்கத்தில் இருந்த சினிமா, இப்போது தேனிக்கும், ஆண்டிப்பட்டிக்கும் சென்றுவிட்டது. தொழில்நுட்பங்கள் அதிவேகமாக மாறியதற்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். சின்சியாரிட்டியும், கடின உழைப்பும் இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம். சப்ஜெக்ட் வித்தியாசமாக இருந்தால் மட்டுமே படம் வெற்றிபெறும்.
இதற்கு ‘களவாணி’, ‘மைனா’ படங்களை உதாரணம் சொல்லலாம். இப்போது வயதானவர்களும், பெண்களும் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது இல்லை. இந்நிலையில் ‘என் தங்கை கல்யாணி’யையோ, ‘தங்கைக்கோர் கீதம்’ படத்தையோ என்னால் தர முடியாது.
தியேட்டருக்கு வரும் இளைஞர்களின் மனதைக் கவர வேண்டும் என்றால், காதலை நக்கலாகவும், லொள்ளாகவும் சொல்லும் படத்தை தர வேண்டும். இப்போது நான் இயக்கும் ‘ஒருதலைக் காதல்’, இளைஞர்களுக்கான காதல் கதையாக உருவாகிறது. இனி, சென்டிமென்ட் கதைகளை படமாக்க மாட்டேன். இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார். விழாவில் கே.ஆர்.ஜி., ஆர்.பி.சவுத்ரி, கேயார், பட்டியல் சேகர், ஆர்.கே.செல்வமணி, வசந்த், தனஞ்செயன், சுமித்ரா, கிருஷ்ணா, சோனியா அகர்வால், சற்குணம், யுகபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.