ரஜினி இப்போது ஓய்விலிருப்பதால், இன்னும் சில தினங்களில் ட்யூன்களை கேட்டு திருத்தங்களைச் சொல்லிவிடுவார் என எதிர்ப்பார்க்கிறார்கள். பொதுவாக ரஹ்மான் வேறு எந்த நடிகருக்காகவும் இந்த மாதிரி காத்திருப்பதில்லை. ஆனால் ரஜினி விஷயத்தில் அவர் விரும்பி காத்திருக்கிறார். இதுகுறித்து ரஹ்மான் இப்படிக் கூறுகிறார்: 'ரஜினி சாருடன் பணியாற்றுவது மிகவும் சந்தோஷமான அனுபவம். அவருக்காக காத்திருக்கிறேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து அவர் என்னைப் பார்க்கிறார். பல சிக்கலான தருணங்களில் அவரது வார்த்தைகள் உந்துதலாக இருக்கின்றன. அவரிடம் நான் கற்றுக் கொண்டது நிறைய. அவர் திரும்ப பழைய உற்சாகத்துடன் வந்து பட வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். அவருக்காக காத்திருக்கிறேன். ராணாவுக்கு நான்கு பாடல்கள் ரெடி. ரஜினி சார் கேட்டுவிட்டு திருத்தங்கள் சொல்ல வேண்டும். அவ்வளவுதான்,' என்றார். பொதுவாக அதிகம் பேசாத ரஹ்மான் இந்த அளவு உணர்ச்சிவசப்பட்டு பேசுவது இதுவே முதல்முறை. சமீபத்தில் கூட, லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஹ்மான், அங்கு ரஜினியின் ரோபோ பாடலை இசைத்தபோது, ரஜினியின் படம் அரங்கிலிருந்த பெரிய திரைகளில் ஒளிரச் செய்தார். ரஜினி படத்தை பார்த்ததும் அந்த அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி ரசித்தனராம். இதனை தனது தளத்தில் 'ரோபோ ரஜினி'க்கு கிடைத்த வரவேற்பு என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார் ரஹ்மான். |