Tuesday, June 14, 2011
ஆவிஅமுதா தொடர்ந்த அவதூறு வழக்கில், நடிகை கனகா சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜரானார். இவ்வழக்கை அடுத்த மாதம் 27ம் தேதிக்கு தள்ளி வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் ஆவி அமுதா. இவர், இறந்தவர்களின் ஆவியுடன், சம்பந்தப்பட்ட உறவினர்கள் பேசும் மையம் ஒன்றை நடத்தி வருகிறார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருபவர் நடிகை கனகா. இவர் "கரகாட்டக்காரன், "அதிசய பிறவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கனகாவின் தாயார் பழம்பெரும் நடிகை தேவிகா. இவர் மறைந்த பின், கனகா மட்டும் ராஜா அண்ணாமலைபுரத்தில் தனியாக வசித்து வந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் கனகாவுக்கு சொந்தமான பண்ணை நிலம் உள்ளது. தனது தாயார் தேவிகாவின் ஆவியுடன் பேசுவதற்காக ஆவிஅமுதாவை கனகா தொடர்பு கொண்டுள்ளார். அப்போது இருவரும் நெருங்கி பழகினர்.
இந்நிலையில் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் முத்துக்குமார் என்பவருக்கும், கனகாவுக்கும் ரகசிய திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களில் முத்துக்குமார், கனகாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். தன்னை விட்டு முத்துக்குமார் பிரிந்து சென்றதற்கு ஆவிஅமுதா தான் காரணம் என, கனகா குற்றம் சாட்டினார்.
தனது மீது அவதூறு செய்தியை பரப்பி, பெயருக்கு களங்கம் விளைவித்த கனகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் ஆவிஅமுதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடந்தது. கனகா மற்றும் ஆவிஅமுதா ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகினர். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 27ம்தேதிக்கு தள்ளி வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.