Tuesday, June 14, 2011
நடிகை ரம்யா கிருஷ்ணன் மீது நடிகை குட்டி பத்மினி தொடர்ந்த வழக்கு விசாரணையை, எழும்பூர் கோர்ட், வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நடிகை குட்டிபத்மினி. இவர், கடந்த 2008ம் ஆண்டு, "கலசம் என்ற பெயரில் தமிழில் கதை ஒன்றை எழுதி அதற்கான திரைக்கதையையும் தயாரித்தார். அந்த கதையை, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் "டிவி சீரியலாக எடுப்பதற்காக, டில்லிக்கு இதை பதிவு செய்யச் சென்றார். அங்கு, நடிகை ரம்யா கிருஷ்ணனை சந்தித்தார். அப்போது கலசம் கதையை படமாக்குவது குறித்து, இருதரப்பிற்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டது.
கதையை படமாக்கும் போது ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாததால், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர் வினயா கிருஷ்ணன் ஆகியோர் மீது, 2009ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அப்போது, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். தொடர்ந்து, 2009 பிப்ரவரி மாதம் மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத்தில், பெயரை பயன்படுத்துவது, கதைக்குரிய பணத்தை தருவது குறித்த ஷரத்துக்கள் இடம்பெற்றன. ஆனால், மீண்டும் ஒப்பந்தத்தை ரம்யா கிருஷ்ணனும், அவரது சகோதரரும் மீறியதுடன், கதையை படமாக்கி தெலுங்கில் வெளியிட்டதுடன், குட்டிபத்மினி பெயரையும் சேர்க்கவில்லை. இதனால், குட்டிபத்மினி, மீண்டும் எழும்பூர் கோர்ட்டில், மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை எழும்பூர் பெருநகர 14வது கோர்ட் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடந்து வந்தது. இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர் வினயா கிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகவில்லை.
தொடர்ந்து, கடந்த 9ம் தேதி இருவருக்கும் "வாரன்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். வாரன்ட் உத்தரவை திரும்பப் பெறுவதற்கான மனுவை ரம்யா கிருஷ்ணன், வினயா கிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், குட்டி பத்மினி தொடர்ந்த மோசடி வழக்கின் விசாரணையை, வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.